இயக்குநர் சுராஜ் தோல்வியில் தொடங்கிய தன்னுடைய சினிமா பயணம் எப்படி வெற்றிகரமாக மாறியது என்பது நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


மூவேந்தர், குங்குமப் பொட்டு கவுண்டர், மிலிட்டரி, தலைநகரம், படிக்காதவன், மாப்பிள்ளை, கத்தி சண்ட, சகலகலா வல்லவன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் இயக்குநர் சுராஜ். இயக்குநராவதற்கு முன் சுந்தர் சி இயக்கிய பல படங்களில் பணியாற்றிய சுராஜ், தன்னுடைய சினிமா பயணம் பற்றி பேசியுள்ளார்.


உசுப்பேற்றி விட்ட நண்பர்கள் 


நான் சினிமா பார்த்து நிறைய பணத்தை இழந்தேன். அதனால் இழந்ததை மீண்டும் எடுக்க சினிமாவுக்குள் வந்தேன் என்றே சொல்லலாம். பார்க்காத படங்களை பற்றி கதை சொல்வது, போஸ்டரை பார்த்து கதை சொல்வது என நான் சொல்வதை கேட்ட நண்பர்கள் சினிமாவில் இயக்குநராகலாம் என உசுப்பேற்றி விட்டனர். அங்கிருந்து நேராக வந்து இயக்குநர் தளபதியை சந்தித்து ஒரு கதை சொன்னேன். 


அவர் அப்போது நம்ம அண்ணாச்சி படம் பண்ணிக் கொண்டிருந்தார். அது முடிந்தது நீங்கள் சொன்ன கதையை  படமாக எடுக்கலாம் என சொல்லி, என்னை நம்ம அண்ணாச்சி படத்தில் வேலை பார்க்க சொன்னார். அங்கு தான் எனக்கு சுந்தர் சி அறிமுகமானார். அதன்பிறகு முறைமாமன், முறைமாப்பிள்ளை, மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா,ஜானகிராமன், அருணாச்சலம் படம் வரைக்கும் சுந்தர் சி உடன் வேலை பார்த்தேன். 


கவுண்டமணியுடனான உறவு 


உள்ளத்தை அள்ளித்தா படம் முடிந்ததும் மேட்டுக்குடி படம் சென்றது. அதன்பிறகு கண்ணன் வருவான் படத்தில் வேலை செய்தேன். அந்த படத்தில் கார்த்தி வெளிநாட்டில் இருந்து வருவது போலவும், அதனால் வீட்டில் அசைவ உணவுகள், துரித உணவுகள் சமைக்கப்பட்டிருப்பது போலவும் காட்சி வைக்கப்பட்டிருக்கும். வீட்டுக்கு வரும் கார்த்திக், எனக்கு இதெல்லாம் வேண்டாம் என்பார். உடனே, பாட்டி உனக்காக பால்சோறு கொண்டு வந்துருக்கேன் என சொல்வார். கார்த்தியும் எனக்கு பால் சோறு என்றால் ரொம்ப பிடிக்கும்பா என சொல்லி சாப்பிடுவார். 


ஷூட்டிங் முடிந்த அன்று கவுண்டமணி என்னை அழைத்தார். சுராஜ் எங்க ஊருல நாய்க்கு தான் பால்சோறு கொடுப்பாங்க. என்னைய்யா படம் எடுக்குறீங்க. உங்களுக்கு தேவையில்லாத சப்ஜெக்ட்ல எடுக்குறீங்க. நீங்க காமெடி படம் எடுப்பீங்கன்னு வந்தா இவ்வளவு செண்டிமெண்டா படம் எடுக்குறீங்க. காமெடி படம் தானடா சொன்னீங்க என தெரிவித்தார். காரணம் கவுண்டமணிக்கு காமெடி படங்களில் நடிக்க பிடிக்கும். 


கைக்கொடுத்த சுந்தர்.சி


ஜானகிராமன் படம் பண்ணும்போது அதில் நடித்த சரத்குமார் என்னை பார்த்துவிட்டு நான் இயக்குநராக அறிமுகமாகிய மூவேந்தர் படத்தில் நடித்தார். அந்த படம் சரியாக போகவில்லை. உதவி இயக்குநராக இருந்து அடுத்தடுத்து பல வெற்றிகளைப் பெற்ற நான் ஒரு வேகத்துடன் இருந்தேன். அதற்கு முன்னதாக சரத்குமார், தேவயானி, மணிவண்ணன் காம்போவில் சூர்யவம்சம் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி இருந்தது. 


ஆனால் மூவேந்தர் படம் தோல்வியால் நான் ஒரு வருடம் வெளியே தலை காட்டவில்லை. எங்க தப்பு பண்ணோம் என யோசித்தேன். அப்போது சுந்தர் சி வந்து அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்தே உனக்காக எல்லாம் உனக்காக படத்தில் கதை, திரைக்கதை எழுதினேன் . பின்னர் குங்குமப் பொட்டு கவுண்டர் படத்தை வேறொரு பெயரில் சத்யராஜை வைத்து இயக்கினேன். தொடர்ந்து வின்னர், கிரி படத்தில் வேலை பார்த்தேன். கிரி படம் சுந்தர் சி தான் தயாரித்தார். அந்த படம் வெற்றி பெற்றால் என் தயாரிப்பில் அடுத்த இயக்குநர் நீதான் என சுந்தர் சொன்னார். சொன்னதைப் போல தலைநகரம் படத்தை தயாரித்ததோடு மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்தார்.