என்னோட மூணு படத்த காப்பியடிச்சாங்க.. தெலுங்கு சினிமாவ பழிவாங்க நான் எடுத்த படம்தான் வின்னர் என்று இயக்குநர் சுந்தர் சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


சுந்தர் சி


சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் அரண்மனை 4 வரும் மே 3-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமன்னா , ராஷி கண்ணா , யோகிபாபு , வி.டி.வி கணேஷ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் தொடர்ச்சியாக கமர்ஷியல் வெற்றிப்படங்களை இயக்கிவந்தவர் சுந்தர். எந்த சீனில் எப்படி காமெடி , ரொமான்ஸ் போன்ற எமோஷன்கள் வொர்க் அவுட் ஆகும்  எங்கு போர் அடிக்கும் என்று ஆடியன்ஸின் பல்ஸ் நன்றாக தெரிந்து வைத்திருப்பவர் சுந்தர் சி. அப்படி அவர் எடுத்தப் படங்களில் ஒன்றுதான் வின்னர். வின்னர் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரம் தான். சமீபத்தில் வின்னர் படம் உருவான விதம் பற்றி சுந்தர் சி பகிர்ந்துகொண்டுள்ளார். 


தெலுங்கு சினிமாவை பழிவாங்க எடுத்தேன்


வின்னர் படம் உருவானற்கு பின் இருக்கும் காரணத்தை விளக்கிய சுந்தர் சி "தெலுங்கு சினிமாவில் என்னுடைய ஒரு படத்திற்கான ரீமேக் ரைட்ஸ் வாங்கிட்டாங்க. ஒரு படத்துக்கான ரைட்ஸ் வாங்கிட்டு என்னோட மூணு படத்துல இருந்து சீன் காப்பி அடிச்சு படம் எடுத்தாங்க. எனக்கு ரொம்ப கடுப்பாகிடுச்சு. தெலுங்கு சினிமாவ பழிவாங்க நான் எடுத்த படம்தான் வின்னர். படத்தின் கதையை நான் பிரசாந்த்திடம் சொன்னபோது ஒரு 10 படங்களின் டிவிடியை அவரிடம் கொடுத்துவிட்டேன். எந்தெந்த படங்களில் எந்தெந்த சீன் எடுக்கப் போகிறோம் என்பதை அவரிடம் தெளிவாக சொல்லிவிட்டேன். ஒரு சீனை அப்படியே எடுத்தால் ஈயடிச்சான் காப்பி என்று சொல்லிவிடுவார்கள். அதனால் ஒவ்வொரு காட்சியிலும் சின்ன சின்ன மாற்றங்களைன்செய்தேன்.  அப்படி எடுத்த ஒரு சீன் தான் வடிவேலு கோலி குண்டுகளின் மேல் வழுக்கி விழும் காட்சி.


தெலுங்கு படத்தில் இதே காட்சி வாழைப்பழத்தில் ஹீரோ சறுக்கி விழுவதுபோல் இருந்தது. அதைதான் கொஞ்சம் மாற்றி நாங்கள் இப்படி எடுத்தோம்.  வின்னர் படம் ரீலிஸான கொஞ்ச நாட்களுக்குப் பின் நான் டிவியில் புதிதாக வந்த தெலுங்கு படத்தின் ப்ரோமோ எல்லாம் வரிசையாக பார்த்துக் கொண்டிருந்தேன் அப்போது வின்னர் படத்தின் இதே காட்சியை அப்படியே எடுத்து வைத்திருந்தார்கள். அப்போதுதான் உங்க அளவுக்கு என்னால முடியாது என்று நான் என் தோல்வியை ஏற்றுக் கொண்டேன்" என்று கூறியுள்ளார்.