இந்திய திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் அருணாச்சலம். 30 நாளில் 300 கோடியை செலவு செய்தால் ரூபாய் 3 ஆயிரம் கோடி கிடைக்கும் என்பதே படத்தின் மையக்கரு ஆகும்.

Continues below advertisement

இந்த படத்தில் ரஜினிகாந்த் லாஜிக் பார்க்காமல் எடுக்கச் சொன்ன ஒரு காட்சி குறித்து கீழே விரிவாக காணலாம். இதுதொடர்பாக, படத்தின் இயக்குனர் சுந்தர்.சி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, 

ரஜினி சொன்ன ஐடியா:

"அந்த ரூமை காலி பண்ற காட்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். திடீர்னு ரஜினி சார் சொன்னாரு, நான் படுத்துருக்கேன். கதைப்படி இரவு 12 மணி. அந்த மேனேஜர் வந்து எழுப்பட்டும். சார் உங்க டைம் முடிஞ்சுருச்சு. நீங்க ரூமை காலி பண்ணனும்னு சொல்லட்டும்.

Continues below advertisement

தப்பா இருக்குது என்ற சுந்தர்.சி:

அப்போ நான் சார்கிட்ட சொன்னேன். என்ன சார் இது? ஒரு உடுப்பி ஓட்டல்ல கூட 100 ரூபாய் ரூம்ல தங்குனாலும் ஒரு மேனேஜர் வந்து எழுப்பி வெளியில போங்கனு சொல்ல மாட்டான். இது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல். இங்க போய் ரூமை விட்டு நீங்க வெளியில போகனும்னு சொன்னா தப்பா இருக்கும் சார். வேண்டாம்னு சொன்னேன்.

அப்போ அவரு சொன்னாரு. இந்த இடத்துல நாம சென்டிமென்ட்தான் பாக்கனும். லாஜிக் எல்லாம் பாத்தா சீன் எடுபடாது. நீங்க எடுங்க. யாராது இந்த சீன் வந்து என்னடா  5 ஸ்டார் ஹோட்டல்ல வந்து எழுப்புறானேனு தப்பித் தவறி வந்து கேட்டா? அப்போ நீங்க என்கிட்ட சொல்லுங்க. நான் உங்ககிட்ட தோல்வியை ஒத்துக்குறேனு சொல்லுனு ரஜினி சார் சொன்னாரு.

ஒருத்தர்கூட கேள்வி கேட்கல:

அவர் சொன்னா கரெக்டாதான் இருக்கும். எடுப்போம்னு எடுத்தேன். இந்த நிமிஷம் வரைக்கும் யாருமே கேட்டது இல்ல என்கிட்ட. ஏன்னா? 5 ஸ்டார் ஹோட்டல்ல ரஜினி சாரை மேனேஜர் எழுப்புனாரு. போக சொல்லுவாரு. தலைமகனே கலங்காதே பேக்ரவுண்ட்ல பாடல் போகும். படம் பாக்கும்போது ஆச்சரியமா இருந்துச்சு. என்ன ஒருத்தவங்க கூட இந்த மாதிரி கேள்வி கேட்க மாட்டோங்குறாங்கனு தோணுச்சு.

இவ்வாறு அவர் பேசினார். 

ரஜினி, செளந்தர்யா, ரம்பா, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரகுவரன், விசு, வி.கே.ராமசாமி, நிழல்கள் ரவி, கிட்டி, ஜனகராஜ், செந்தில், ராஜா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். கிரேஸி மோகன் வசனம் எழுதிய இந்த படத்தில் யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருப்பார். 

ப்ளாக்பஸ்டர் வெற்றி:

சாய் சுரேஷ் எடிட்டிங் செய்திருப்பார். தேவா இசையமைத்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஆகும். ஆங்கிலத்தில் வெளியான ப்ரூவ்ஸ்டர் மில்லியன்ஸ் என்ற நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. பாட்ஷா, முத்து என்ற மாபெரும் வெற்றிப்படங்களுக்கு பிறகு ரஜினி நடித்த  இந்த அருணாச்சலம் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 1997ம் ஆண்டு வெளியான இந்த படம் அப்போது இளம் இயக்குனராக இருந்த சுந்தர்.சிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.