தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர்சி. முறைமாமன் படம் மூலமாக தமிழில் இயக்குனராக அறிமுகமானவர். உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், உள்ளம் கொள்ளை போகுதே, கிரி, லண்டன், கலகலப்பு, அரண்மனை என பல வெற்றிப்படங்களை இயக்கியவர்.

கேங்கர்ஸ்:


இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தலைநகரம், அரண்மனை போன்ற பல வெற்றிப்படங்களையும் தந்துள்ளார். அரண்மனை 4 படத்தின் வெற்றிக்கு பிறகு சுந்தர் சி தற்போது கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார்.


முழுக்க முழுக்க காமெடி கலந்த கதையாக இந்த படம் உருவாகுகிறது. இந்த படத்தில் நடிகர் சுந்தர் சியுடன் இணைந்து நடிகர் வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி – வடிவேலு கூட்டணி இணைகிறார்கள். கலகலப்பான காமெடியான படங்களை இயக்குவதில் சுந்தர்.சிக்கு நிகர் அவரே என்பதற்கு பல படங்கள் உதாரணம் ஆகும்.

சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் வடிவேலு:


அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்த வின்னர், லண்டன், கிரி, ரெண்டு, நகரம் மறுபக்கம் படத்தில் நடித்திருப்பார். இந்த படங்களில் இடம்பெற்ற வடிவேலுவின் காமெடி காட்சிகள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகும்.


நகரம் மறுபக்கம் படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கிய படங்களில் நடிகர் வடிவேலு நடிக்கவில்லை. இந்த சூழலில், நகரம் படத்திற்கு பிறகு சுமார் 14 வருடங்களுக்கு பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கிறார். இதனால், இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

கேங்கர்ஸ் சிங்காரம்:


ஏற்கனவே இவர்கள் காம்போவில் வந்துள்ள அனைத்து படங்களின் காமெடிகளும் மிகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்பதால் கேங்கர்ஸ் படமும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த படத்தில் நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வீரபாகு, கைப்புள்ள கதாபாத்திரம் போல கேங்கர்ஸ் சிங்காரம் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் சுந்தர் சி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இந்த படத்திற்கு சி சத்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சுந்தர் சி, வடிவேலு ஆகியோருடன், மைம் கோபி, கேத்ரின் தெரசா, அருள்தாஸ், முனீஸ்காந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சிறிய ஊரில் நடக்கும் கொள்ளை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.