பராசக்தி படத்தின் கதையுலகை அறிமுகப்படுத்தும் விதமாக இன்று சென்னையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுதா கொங்கரா இந்த படத்தில் தன்னை இந்த படத்தில் மிகவும் பாதித்த விஷயத்தை பகிர்ந்துக்கொண்டார்.
பராசக்தி பட விழா
வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு படம் வெளிவருவதற்கு முன்னதாக, அதன் உலகம் மக்களுக்காக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுமக்கள் அடுத்த மூன்று நாட்கள் (19, 20, 21 டிசம்பர்) பராசக்தி உலகை கண்டுகளிக்கலாம் .பராசக்தி படத்தின் இந்த உலகை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, வள்ளுவர் கோட்டம் அரங்கில், ரசிகர்கள் சூள, படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
சுதா கொங்கரா
திரைப்படம் மூலம் நாம் ஒவ்வொரு வாழ்வியலில் போய் வாழலாம். அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இறுதிச்சுற்று படத்தில் ஒரு குத்துச்சண்டை உலகில் வாழ்ந்தது போல், பராசக்தி படத்தில் நம் வரலாற்றுக் காலத்தில் நுழைந்து பார்த்திருக்கிறோம். நம் உரிமைக்காக நாம் சண்டையிட வேண்டும் எனும் கருத்து என்னை மிகவும் பாதித்தது. வரலாற்று உலகைத் திரும்பக் கொண்டு வர ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம். அந்த காலகட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளோம். 1960 காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்து விட்டு வந்தது போல் இருக்கிறது. கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.
ஜீவி பிரகாஷ் பேசியது
பராசக்தி ஒரு பெரிய உலகம். சுதா கொங்கரா எனக்கு சூரரைப் போற்று படத்தில் தேசிய விருது வாங்கி தந்தார். நான் ரஹ்மான் சாரிடம் இருக்கும் போதே, சுதா எனக்குப் பழக்கம். அவருடன் நிறையப் படங்கள் செய்யவில்லை. நீண்ட காலம் கழித்து சூரரைப் போற்று படம் செய்தோம். அது எனக்கும் சூர்யா சருக்கும் மிகப்பெரிய படமாக அமைந்தது. அதற்கான நன்றிக்கடன் தான் பராசக்தி. பராசக்தியில் மீண்டும் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.
ஏற்கனவே பீரயட் படங்களில் மதராஸப்பட்டினம் படம் செய்துவிட்டோம், அதிலிருந்து மாறுபட்டு என்ன செய்யப்போகிறோம் என்பது தான் கேள்வியாக இருந்தது. அதைத் தர உழைத்திருக்கிறோம். சிவா உடன் அமரனுக்குப் பிறகு மீண்டும் இணைகிறேன். ரவி மோகன், அதர்வா ஶ்ரீலீலா என எல்லோருக்கும் நன்றி. இவ்வளவு பெரிய படத்தைத் தாங்க ஆகாஷ் போன்ற தயாரிப்பாளர் இருக்க வேண்டும். இப்படத்தில் ஒரு பீரியட் ஃபீல் இருக்கும். ஒரு பெரிய புரட்சியைப் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். அதை இசையாகக் கொண்டு வர முயற்சித்திருக்கிறோம். இதில் எல்லோரும் பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.