சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி படத்தில் முதலில் சூர்யா நடிக்கவிருந்து, பின் ஏன் விலகினார் என்பதை இயக்குநர் சுதா கொங்கரா தெளிவுப்படுத்தியுள்ளார்.
பராசக்தி படம்
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள படம் “பராசக்தி”. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் 2026 பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். அதேபோல் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100வது படமாகும்.
இந்த படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது. பராசக்தி இசை வெளியீட்டு விழா ஜனவரி 3ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
சூர்யா விலகிய காரணம்
இந்த நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய சுதா கொங்கராவிடம், பராசக்தி படம் முதலில் சூர்யா பண்ணுவதாக இருந்தது, பிறகு என்ன நடந்தது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆமாம். முதலில் இந்த படம் சூர்யா பண்ணுவதாக இருந்தது. அந்த படத்திற்கு புறநானூறு என பெயரிட்டிருந்தோம். கொரோனா சமயத்தில் நான் இந்த கதையை சொன்னேன். வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறனும், நானும் நண்பர்கள். 2019ல் கொரோனா தொடங்கிய காலக்கட்டத்தில் உலகம் ஸ்தம்பித்து நின்ற நேரத்தில் நாங்கள் நிறைய விஷயம் பற்றி பேசினோம்.
அதில் இந்த பராசக்தி பட ஐடியா எனக்கு பிடித்திருந்தது. இதனை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கலாமா என யோசித்தேன். எனக்கு அப்போது சூர்யாவை மட்டும் தான் தெரியும். அவரிடம் ஐடியா சொன்னதும் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தார். கொரோனா காலக்கட்டத்தில் உலகமே இயங்காமல் இருந்தது. இதனால் படம் தொடர்பான தகவல்களை திரட்ட கடினமாக இருந்தது. அப்போது சூர்யா பண்ண வேண்டி இருந்தது.
அவர் ஏன் அந்த படத்தில் இருந்து விலகினார் என்ற காரணம் சரியாக தெரியவில்லை. ஆனால் ஒரு பிரச்னை இருந்தது. அதாவது தொடர்ச்சியாக ஷூட்டிங் செல்லும் அளவுக்கு சூர்யாவுக்கு நேரம் கிடையாது. பராசக்தி படம் தொடர்ச்சியாக ஷூட்டிங் செல்லவில்லை என்றால் அனைத்தும் வீணாகி விடும். அதுதான் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகுவதற்கான காரணமாக அமைந்தது” என சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.