பாகுபலி பட இயக்குநர் அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீக தளங்களுக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். இந்த இடங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் ராஜமெளலி.


ராஜமெளலி


பாகுபலி திரைப்படத்தின் மூலமாக உலகளவில் புகழ்பெற்றவர் ராஜமெளலி. சரித்திரக் கதையான பாகுபலி கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது பாகுபலி. இதனைத் தொடர்ந்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் ராஜமெளலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெருக்கியது.  அவர் இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலகம் முழுவதிலும் ஆயிரம் கோடிகளை வசூல் செய்து ஆஸ்கர் விருதுக்கும் தேர்வாகியது. இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் கோல்டன் க்ளோப் விருதையும் வென்றது. உலக அளவில் தவிர்க்க முடியாத இயக்குநராக தற்போது இருக்கிறார் ராஜமெளலி.


தமிழ்நாட்டில் ஆன்மிகச் சுற்றுலா


புராணக் கதைகள், கோவில்கள், சிற்பங்கள், கட்டிடக்கலை ஆகியவற்றின் மேல் தீவிர ஆர்வம் கொண்டவர் ராஜமெளலி. அண்மையில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வந்த அவர் தமிழகத்தில் இருக்கும் ஆன்மீகத் தளங்களுக்கு சாலை வழி சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார். தான் மட்டுமில்லாம தனது மகள் மற்றும் மனைவியுடன் இந்த சுற்றுலாவை மேற்கொண்டுள்ளார் அவர்.


தமிழகத்தின் கோவில்கள்






ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர், ராமேஸ்வரம், கானாடுகாத்தான் தூத்தூக்குடி ஆகிய இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்துள்ளார் ராஜமெளலி. மேலும் இந்த இடங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் அவர்.


“மத்திய தமிழகத்திற்கு நீண்ட நாட்களாக சாலை வழிப் பயணம் செல்ல விரும்பினேன். என்னுடன் இந்தப் பயணத்தில் இணைய விருப்பம் தெரிவித்த என் மகளுக்கு நன்றி. பாண்டியர்கள், சோழர்களின் நேர்த்தியான கட்டிடக்கலைகள் மற்றும் ஆழ்ந்த ஆன்மீக சிந்தனைகள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. மந்திரக்கூடம் கும்பகோனம் காகா ஹோட்டலில் பிரமாதமான உணவுகள் கிடைத்தன. ஒரு வாரத்திற்குள்ளாக இரண்டிலிருந்து மூன்று கிலோ வரை எடை கூடியிருப்பேன் என்று நினைக்கிறேன். 3 மாதக கால வெளிநாட்டு உணவிற்குப் பின் தாயகத்தில்  இந்தப் பயணம் புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது“ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராஜமெளலி