ஆஸ்கர் விருது வென்றுள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஏன் இந்தியாவில் படமாக்கப்படவில்லை என்பதை இயக்குநர் ராஜமௌலி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் ஆர்.ஆர்.ஆர்.படம் வெளியானது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்த நிலையில் கீரவாணி இசையமைத்திருந்தார்.
இதனிடையே அகாடமி அவார்ட்ஸ் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழாவின் 95வது நிகழ்வில் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் விருது வென்றுள்ளது. இதற்கான விருதை இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் பெற்றுக் கொண்டனர்.
இந்த பாட்டின் நடன அசைவுகள் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் ஆட்டம் போடவும் வைத்தது. முன்னதாக சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்ட சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடலுக்காக இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் கூட்டாக பெற்றுக்கொண்டனர்.
உக்ரைனில் படப்பிடிப்பு
இதற்கிடையில் நாட்டு நாட்டு பாடல் உக்ரைனில் உள்ள அதிபர் மாளிகை முன்பு படமாக்கப்பட்டது. கடந்த ஒரு வருடமாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அதற்கு முன்பாகவே இந்த பாடலானது படமாக்கப்பட்டது. ஆனால் ஏன் இப்பாடல் இந்தியாவில் படமாக்கப்படவில்லை என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இதற்கு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ராஜமௌலி பதிலளித்துள்ளார்.
அதன்படி, “நாட்டு நாட்டு பாடலை முதலில் படமாக்க நினைத்தபோது, லொகேஷன் பற்றி நிறைய யோசித்தோம். இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த விரும்பினோம். ஆனால் அப்போது மழைக்காலம் என்பதால் படப்பிடிப்பு தடைபடும் என்று நினைத்தோம். இதன்பின்னரே உக்ரைன் அதிபர் மாளிகை முன் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம்” என தெரிவித்தார்.
மேலும், ‘உக்ரைன் அதிபர் கட்டிடத்தின் வண்ணங்கள், எதிரே உள்ள காலி இடம் அந்த பாடலுக்கு எல்லா வகையிலும் பொருத்தமாக இருந்தது. அங்கு படமாக அனுமதி கிடைக்குமா? என்ற சந்தேகம் எங்களுக்கும் இருந்தது. ஆனால், அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி திரைப்படப் பின்னணி கொண்டவர் என்பதால், அந்தப் பாடலைப் படமாக்க அவருக்கு அனுமதி கிடைத்தது’ என்று ராஜமௌலி அந்த பேட்டியில் கூறியுள்ளார். பாடல் முடிந்ததும் நாட்டு நாட்டு படப்பிடிப்பிற்கு இதுதான் சரியான இடம் என்று பலரும் பாராட்டினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.