நடிகர் பரத் நடித்துள்ள காளிதாஸ் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அப்படத்தின் இயக்குநர் ஸ்ரீ செந்தில் கண் கலங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கிய காளிதாஸ் படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. இந்த படம் சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்டது. இந்த படத்தில் பரத் ஹீரோவாகவும், ஆன் ஷீதல் ஹீரோயினாகவும் நடித்திருந்தார். மேலும் ஆதவ் கண்ணதாசன், சுரேஷ்  சந்திரா மேனன், தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலானது. தற்போது 7 ஆண்டுகளுக்குப் பின் காளிதாஸ் 2 படம் உருவாகியுள்ளது. இதில் 90ஸ் நடிகை சங்கீதா, பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் ஸ்ரீ செந்தில், “காளிதாஸ் 2 படத்தின் பயணம் மிகப்பெரியது. 2014 செப்டம்பரில் நான் ஒரு ஹீரோவை சந்தித்து வித்தியாசமான கதை சொன்னேன். அவர் அந்த கதை பிடிக்கவில்லை என சொன்னார். அது எனக்கு வருத்தமாக இருந்தது. அன்று மாலை மெட்ராஸ் படம் தியேட்டரில் பார்த்தேன். அப்போது நாம் என்ன பண்ண நினைக்கிறோமோ அது நடக்கும் என்ற நம்பிக்கை எழுந்தது. அங்கிருந்து வந்த பிறகு தான் காளிதாஸ் 1க்கான கதை தொடங்கியது. அப்படத்தின் தயாரிப்பாளர் தான் காளிதாஸ் படம் உருவாக காரணமாக அமைந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது. 

Continues below advertisement

கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் எல்லாம் மாறியது. படம் இல்லாததால் பழைய இயக்குநராக மாறிவிட்டேன். ஒரு கதைக்காக விஜய் சேதுபதியை சந்திக்கும்போது அவர் தான் ஒரு ஐடியா சொன்னார். பெரிய படம் பண்ணுவதை விட நல்ல படம் செய் என சொன்னார். அப்படியாக காளிதாஸ் 2 படம் உருவாக காரணமாக அமைந்தது. 

ஒரு கேரக்டரில் பரத் நடித்த நிலையில், மற்றொரு கேரக்டரில் அஜய் நடித்தார். நிச்சயம் படம் வெளிவரும்போது இது எவ்வளவு பெரிய அளவில் உருவாகியிருக்கிறது என்பது புரியும். நன்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் செந்தில் தான் இப்படம் இவ்வளவு பெரிய அளவில் உருவாகும் எண்ணத்தைக் கொண்டு வந்தார் என தெரிவித்தார். 

அப்போது இயக்குநர் ஸ்ரீ செந்தில் கண்கலங்கி பேசினார். நான் நடிகர் தினாவுக்கும் மற்றும் என்னை தாங்கிய குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நான் சினிமா மீதிருந்த ஆர்வத்தால் ஒரே நாளில் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு வந்தேன். அப்போது என்னை குடும்பத்தினர் தான் தாங்கி பிடித்தார்கள் என அவர் தெரிவித்தார்.