பிரம்மாண்டங்களுக்கு பெயர்போன ஷங்கர்
ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஷங்கர். ஜெண்டில்மேன் படம் தொடங்கி காதலன் , முதல்வன் , இந்தியன் , ஜீன்ஸ் , அந்நியன் , எந்திரன் என பல மெக ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். காட்சி உருவாக்கத்தில் பிரம்மாண்டம் , அதிநவீன தொழில்நுட்ப பயண்பாடு என ஷங்கர் படங்களுக்கு என ஒரு தனித்துவம் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இரு படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளன.
இரு படங்களின் தோல்வி
கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பொங்லை முன்னிட்டு வெளியான ராம் சரணின் கேம் சேஞ்சர் படமும் படுதோல்வி அடைந்தது. ஒரு காலத்தில் ரசிகர்கள் வியந்து பார்த்த இயக்குநரா இன்று இப்படி மொக்கையாகிவிட்டார் என்கிற அளவிற்கு இந்த இரு படங்களும் சுமாரான விமர்சனங்களையே பெற்றன. அதே பிரம்மாண்டம் இந்த படங்களில் இருந்தன என்றாலும் திரைக்கதை ரீதியாக ஷங்கர் தன்னை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்கிற கருத்து பலரால் முன்வைக்கப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் இல்லாமல் திண்டாடும் ஷங்கர்
இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரு படங்களின் தோல்வி ஷங்கரின் கரியரில் பெரிய அடியாக விழுந்துள்ளன. அடுத்தபடியாக வெளியாக இருந்த இந்தியன் 3 திரைப்படமும் பாதி பணிகள் முடிவடையாமல் கிடப்பில் உள்ளது. தொடர்ந்து ஷங்கர் இயக்கவிருந்த சரித்திர படமான வேள்பாரி குறித்த அப்டேட்களும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து இரு படங்களின் தோல்விக்குப் பின் ஷங்கர் படத்தில் நடிக்க பெரிய நடிகர்கள் தயக்கம்காட்டி வருவதாகவும் ஷங்கரிடம் கதை கேட்க எந்த தயாரிப்பாளரும் இதுவரை முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் ஷங்கர் கைவசம் எந்த படமும் இல்லை என்று கூறப்படுகிறது. யானைக்கும் அடி சறுக்குவது வழக்கம்தான். கூடிய விரைவில் செம வெயிட்டான கதை ஒன்றுடன் ஷங்கர் கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்