தமிழ் சினிமாவின் பிரமாண்டமான இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'இந்தியன் 2'. இப்படம் எதை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது, அதன் தூண்டுதல் என்னால் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணலில் பேசி இருந்தார். 



 


பொதுவாக சீக்வேல் படங்கள் ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் வந்து விடும். ஆனால் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் இந்தியன் படத்தை சீக்வெல்லாக எடுக்க எனக்கு எந்த நோக்கமும் அந்த சமயத்தில் கிடையாது. கமல் சார் தான் அப்படி எடுத்தால் நன்றாக இருக்கும் என விரும்பினார். ஒவ்வொரு படத்தை முடித்த பிறகும் அடுத்த படம் குறித்து யோசிக்கும் போது சேனாபதி தாத்தா, லஞ்சம், ஊழல் இதெல்லாம் ஞாபகத்துக்கு வரும். ஆனால் அதை ஒரு கதை வடிவமாக கொண்டு வர முடியவில்லை. காரணம் முதல் பாகத்திலேயே அவரின் குடும்பம், சுதந்திர போராட்ட வீரர், வர்ம கலை இப்படி பல விஷயங்களையும் காட்டியாச்சு. அதனால் புதிதாக வேறு ஏதாவது காட்ட வேண்டும் என்று பலமுறை அலசி யோசித்த பிறகு கிடைத்த கதை தான் இந்தியன் 2 - "ஜீரோ டாலரன்ஸ்".



"ஜீரோ டாலரன்ஸ்" என்ற டேக் உடன் வெளியாகியுள்ள இந்த இந்தியன் 2 படத்தின் மைய கருவே இந்த காலகட்டத்தில் அது மிக முக்கியமானது என்பது தான் சேனாபதி கேரக்டரின் கருத்து. தப்பு செய்தால் பெற்ற மகனாகவே இருந்தாலும் அதை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்பது  முதல் பாகத்திலேயே தெளிவாக காட்டப்பட்டு இருந்தது. அதனுடைய தொடர்ச்சி தான் இந்த "ஜீரோ டாலரன்ஸ்". 


அந்த காலகட்டத்தில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான அந்த பார்வை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இருக்க தானே செய்கிறது. இன்றும் பேப்பரை திறந்து பார்த்தல் லஞ்சம், விவசாயி பாதிப்பு, ஊழல் நடக்கிறது இப்படி பட்ட செய்திகளை நாம் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம். அந்த வகையில் பார்த்தால் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற ஒரு கதை தான். ஊழல், லஞ்சத்துக்கு எதிரான பார்வை இந்த படத்தில் கொஞ்சம் விரிவாகவே இந்தியன் 2 படத்தில் இருக்கிறது.