இப்போதெல்லாம் வெளியாகும் படங்களை விட அதையொட்டி நடக்கும் சம்பவங்கள் தான் சுவாரஸ்யமாக உள்ளத. அந்த வகையில் எந்த படம் வெளியானாலும், அலையா விருந்தாளியாக வந்து, ‛வெந்து தணிந்தது காடு... ஏதாவது ஒரு படத்திற்கு வணக்கத்தை போடு’ என தேய்ந்த டேப்பாக தேய்ந்து கொண்டிருக்கும் கூல் சுரேஷ் அட்ராசிட்டி, நாளுக்கு நாள் அத்துமீறி போய்க் கொண்டிருக்கிறது.
கடந்த சில படங்களின் வெளியீட்டன்று, படத்தை ப்ரமோஷன் செய்கிறேன் பேர்வழி என்கிற பெயரில், படத்தின் கதாநாயகிகளின் அழகை வர்ணித்து , கூல் சுரேஷ் எல்லை மீறி வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் கடந்த வாரம் வெளியான கார்த்தி-அதிதி நடித்த விருமன் படம் வெளியான போது, வழக்கம் போல முதல் நாள் ஷோ விற்கு வந்த நடிகர் கூல் சுரேஷ், படத்தை விட படத்தின் நாயகியான இயக்குனர் சங்கரின் மகள் அதிதியை காதலிப்பதாகவும், அவரை இயக்குனர் ஷங்கர் தனக்கு திருமணம் செய்து தர வேண்டும் என்றும் உளறிக் கொட்டினார். இதோ அந்த பேச்சு...
‛‛டைரக்டர் ஷங்கர் சார், உங்க படத்துல மட்டும் தான் காலை வாழ வைப்பீங்க அப்படினா... என்னோட காதலை வாழ வைக்க மாட்டீங்க, அப்படினு எனக்கு ஒரு தகவல் வந்துச்சுனா... என்னோட காலைி அதிதி முன்னாடி இந்த மாதிரி ஏதாவது சொல்லிருந்தீங்கன்னா... நான் நேரா கமிஷனர் ஆபிஸ் தான் போறேன். போய், என்னோட காதலை வாழ வையுங்கன்னு சொல்லி, கண்டிப்பாக கமிஷனரிடம் மனு கொடுப்பேன். அங்கேயும் எதுவும் முடியாமல் போனால் நேராக முதல்வர் வீட்டு முன் அமர்ந்த உண்ணாவிரதம் இருப்பேன். நான் மட்டுமல்ல, என்னோட காதலி அதிதியும் சேர்ந்து தான் இந்த உண்ணாவிரதம் இருப்பேன். தயவு செய்து, ஷங்கர் சார் என்னோட காதலை வாழ வையுங்க. உங்க படத்தை போல, உங்க மகளையும் பிரம்மாண்டமாக தான் வளர்த்திருப்பீங்க.
என் வீட்டுக்கு வரவைங்க, கயித்து கட்டில்ல உட்கார வைத்து, கால் அமுக்கி, கண்கலங்காமல் பார்த்துக்கிறேன். தயவு செய்து என் காதலை வாழ வையுங்க ஷங்கர் சார். இயக்குனர் ஷங்கர் சார்... பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சார்... உங்க வீட்டுக்கு நான் மருமகனா வர எனக்கு தகுதி இருக்கா என்னனு தெரியல; இருந்தாலும் உங்களை பார்க்கும் போது நல்ல மனுஷனா தெரியுறதால, என்னை நீங்க மருமகனா ஏத்துப்பீங்கனு நினைக்கிறேன். எனவே, அதிதி(முத்தம் கொடுக்கிறார்) ஐ லவ்யூ... அதிதி ஐ லவ் யூ, அதிதி ஐலவ்யூ...’’
என்று விருமன் வெளியீட்டன்று, கூல் சுரேஷ் பேசியிருந்தார். இந்நிலையில், கூல் சுரேஷின் இந்த பேச்சு, இயக்குனர் சங்கர் தரப்பிற்கு கடும் கோபத்தை கிளப்பியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கூல் சுரேஷை அழைத்து, ஷங்கர் கடுமையாக கடிந்ததாகவும், எல்லை மீறிய பேச்சை வாபஸ் வாங்காமல் போனால், சட்ட ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் தனது பேச்சை கூல் சுரேஷ் வாபஸ் வாங்கியதோடு, அதிதியை தனது தங்கை என்றும் கூறியுள்ளார். இதோ அந்த பேச்சு...
‛‛போன வாரம் விருமன் ரிலீஸ் அப்போ, ஷங்கர் சாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் அந்த மாதிரி பேசியிருக்க கூடாது. நான் ஸ்கூல் படிச்ச போது, என் கூட தேன்மொழி என்ற மாணவி படித்தார். விருமன் படத்தை பார்த்த போது, எனக்கு அந்த நியாபகம் வந்தது. இதனால் உணர்ச்சிவசப்பட்டு அதிதியை ஐ லவ்யூ என்று கூறிவிட்டேன். ஷங்கர் சார் என்னை மன்னிச்சிடுங்க. உங்க மனதை கஷ்டப்படுத்துற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அதிதி என்னை மன்னிச்சிடுமா. நீ எனக்கு தங்கச்சி மாதிரி’’
என்று அப்படியே சரணடைந்தார் கூல் சுரேஷ். மைக் நீட்டும் போது, உணர்ச்சிவசப்பட்டு எதையாவது பேசுவது, அப்புறம், அய்யோ அம்மா என சரணடைவது. இதற்கு தான், பேசும் போதே புரிந்து, அறிந்து பேச வேண்டும் என்று கூறுகிறார்கள்.