தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநரான செல்வராகவன் தனது திரைப்படங்களில் அழகான காதல் காட்சிகளைப் படமாகுவதற்காகப் பிரபலமானவர். அவர் தமிழ் சினிமாவில் கொடுத்திருக்கும் முக்கியமான வெற்றிப் படங்கள் அனைத்தும் காதல், உறவுகள் முதலானற்றிற்குப் புதிய பரிமாணங்களை அளித்திருந்தது. பதின்பருவத்தைச் சேர்ந்த ஆணின் கதையாக உருவான `துள்ளுவதோ இளமை’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு அவரின் திரைப் பயணத்தைத் தொடங்கி வைத்ததோடு, அவரின் தம்பி நடிகர் தனுஷ் சினிமாவுக்குள் நுழைய காரணமாகவும் அமைந்தது. 


`துள்ளுவதோ இளமை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் செல்வராகவன் பல்வேறு காதல் திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு, `காதல் கொண்டேன்’ திரைப்படத்தில் அவரும் நடிகர் தனுஷும் மீண்டும் இணைந்தனர். இந்தத் திரைப்படம் இருவருக்கும் மிக முக்கியமானதாகவும் அமைந்தது. சமூகத்தில் இருந்து விலகியே வாழும் ஆணுக்கும், அவன் சந்திக்கும் பெண் மீதான அவனின் காதலும் குறித்த கதையாக உருவானது `காதல் கொண்டேன்’.



காதல் கொண்டேன்


இயக்குநர் செல்வராகவனுக்கு அதிகளவிலான புகழைப் பெற்றுத் தந்த மற்றொரு திரைப்படம், `7ஜி ரெயின்போ காலனி’. கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான `7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டது. மேலும், இதில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆணின் ஆழமான காதலைப் பற்றிய திரைப்படமாக உருவானது இந்தத் திரைப்படம். 


வாழ்க்கையில் எந்த விதத்திலும் முன்னேறாத ரவி, தன் குடியிருப்புப் பகுதியில் புதிதாகக் குடியேறியுள்ள அனிதாவை விரும்புகிறான். அவளை ஈர்க்க அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவதோடு, அவனையே காமெடியனாகவும் அந்த முயற்சிகள் மாற்றுகின்றன. இறுதியில் விபத்து ஒன்றில் அனிதா மரணமடைய, தற்கொலை செய்து தன்னையே மாய்த்துக் கொள்ள முயல்கிறார் ரவி. இறுதிக்காட்சியில் தன் கற்பனையில் அனிதாவுடன் கடற்கரையில் அமர்ந்தபடி, ரவி பேசிக் கொண்டிருப்பதோடு இந்தத் திரைப்படம் முடிவடைகிறது. 



7ஜி ரெயின்போ காலனி


இந்தத் திரைப்படம் பெரிதும் வரவேற்கப்பட்டதோடு, கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றது. பல்வேறு விருதுகளை வென்ற இந்தத் திரைப்படம், நடிகர் ரவி கிருஷ்ணாவுக்குச் சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றுத் தந்தது. 


இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து, `புதுப்பேட்டை’, `ஆயிரத்தில் ஒருவன்’ என புதிய பாதையில் இயக்குநர் செல்வராகவன் பயணிக்கத் தொடங்கினார். எனினும், அவரது பாணியிலான காதல் கதைகளை `மயக்கம் என்ன’, `இரண்டாம் உலகம்’ முதலான திரைப்படங்களில் இடம்பெறச் செய்திருந்தார் இயக்குநர் செல்வராகவன்.


செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் `நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.