நடிகர் பரத் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி நேர்காணல் ஒன்றில் சொன்ன தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


20 ஆம் ஆண்டில் பரத்


பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் பரத் திரையுலகில் தனது 20 ஆம் ஆண்டை கொண்டாடி வருகிறார். இது தொடர்பான நேர்காணல் ஒன்றில் பரத்துடன் இயக்குநர் சீனு ராமசாமி கலந்து கொண்டார். 


கடந்த 2007 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் பரத் கூடல் நகர் என்னும் படத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் பாவனா, சந்தியா,மகாதேவன் உள்ளிட்டோர் நடித்தனர்.  கூடல் நகர் படத்தில் பரத் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சபேஷ்-முரளி இசையமைத்த இப்படம் இயக்குநராக சீனு ராமசாமிக்கு முதல் படமாக அமைந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டைப் பெற்றது. இதனால் அந்த நேர்காணலில் தன் வேலையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு பரத்துக்காக கலந்து கொண்டதாக சீனு ராமசாமி தெரிவித்திருந்தார். 


ஒரே நடிகர் பரத் தான் 


அதில் பேசிய அவர்,  முதல் எழுத்து, விதை, முத்தம் ஆகியவை போன்று இயக்குநராகும் ஒரு எண்ணம் எனக்கு நனவாக அன்றைக்கு பரத் தான் காரணமாக இருந்தார். அதனை என்னால் மறக்க முடியாது. நான் இப்போதும் கதை எழுதும்போது இதில் பரத் நடித்தால் எப்படி இருக்கும் என்று தான் நினைப்பேன். அவர் ஓடிடி தளத்தில் நடித்த படங்கள் பார்த்தேன். அவ்வளவு அழகாக நடித்திருந்தார். இன்னும் நடிப்பில் ஆர்வமாக இருந்திருந்தார். 


பரத் தமிழ் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அதேபோல் ஒடிசாவில் பேசப்படும் ஒடியா மொழியில்  நடித்த ஒரே நடிகர் பரத் மட்டும் தான். இன்றைக்கும் அந்த மாநில மக்களுக்கு பரத் யார் என்றால் தெரியும். அவர் அங்கு இறங்கினால் மக்கள் கூட்டம் கூடும். நான் ஒருவேளை தர்மதுரை மாதிரியான படம் எடுத்தால் அதில் பரத் தான் ஹீரோவாக இருப்பார். நாங்கள் இருவரும் மீண்டும் களத்தில் இணைவோம். 


என்னுடைய கூடல் நகர் படத்தில் பரத் நடித்தார். சீனு ராமசாமி இயக்குநராக காரணம் இவர் தான் என்பதால் அதனை என்றைக்கும் மறக்க முடியாது. காதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு பரத் பிஸியாகி விட்டார். நான் அறிமுக இயக்குநராக கதை சொல்ல போன போது யார் என்றெல்லாம் கேட்காமல், கிளைமேக்ஸ் வரை கேட்டு விட்டு கண்டிப்பாக பண்றோம் சார் என சொன்னார். அவரே சரியான தயாரிப்பாளர் கிட்ட அனுப்பி கூடல்நகர் படத்தை வெளிக்கொண்டு வர காரணமாக அமைந்தார்” என தெரிவித்துள்ளார்.