பொன்னியின் செல்வன் பட விவகாரத்தில் இயக்குநர் மணிரத்னத்தை விமர்சிப்பவர்களை இயக்குநர் சீனு ராமசாமி சரமாரியாக விமர்சித்துள்ளார். 


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.






5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி வசூலில் மாபெரும் சாதனைப் படைத்துள்ளது. படம் மேக்கிங்கில் சூப்பராக வந்துள்ளதாகவும், அனைத்து கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் புத்தகம் படிக்காதவர்களுக்கு கூட கதை புரியும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






ஒருபுறமும் படமும் வசூலில் ரூ.300 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மறுபுறம் இப்படத்தில் சில காட்சிகளை நாவலில் இருப்பதைப் போன்று காட்சிப்படுத்தாமல், திரித்து காட்சிப்படுத்தியுள்ளதாக சரமாரியாக மணிரத்னம் மீது விமர்சனம் எழுந்துள்ளது. பலரும் அவரை விமர்சித்து வரும் நிலையில் ஆதரவாக சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் படம் பார்த்த திருச்சி சிவா எம்.பி., இந்தக் காவியத்தை திரைப்படமாக்கிய மணிரத்னத்திற்கு பாராட்டு தெரிவிப்பது ஒரு தமிழனின் கடமையாய் உணர்கிறேன் என்றும், இதில் குறைகளை மட்டுமே சுட்டுவதை ஏற்கவும் இயலாது எனவும் தெரிவித்தார். 


அதேசமயம் மணிரத்னம் இடதுசாரி குணம் கொண்டவர் என்பதற்காக அவர் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. காந்தியையும், அண்ணாவையும் விமர்சித்த உலகம் என்பதால் மணிரத்னம் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல என தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எல்லோரையும் குளித்து வரச்சொன்னாய் நந்தனை மட்டும் ஏன் தீக்குளித்து வரச்சொன்னாய் என்றார் கலைஞர் தன் மகனுக்கு நந்தன் என பெயரிட்டவர் மணிரத்னம் சார் பம்பாய் ரோஜா கண்ணத்தில் முத்தமிட்டால் படங்களால் எதிர்ப்புகள் பார்த்தவர் ஜாதிக்கட்சியினர் சினிமாக்காரர்கள் அவரை சிறுமை செய்வது ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.