மக்களின் வாழ்வியலை மிகவும் எதார்த்தமாக திரையில் படமாக்கும் திறமையான இயக்குனர் சீனு ராமசாமியின் பிறந்த நாள் இன்று. அவருக்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.  


மக்களின் வாழ்வியலை திரையில் காட்சியாகும் இயக்குனர் :


தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அந்த வகையில் தமிழ் மக்களின் நிஜ வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாக திரையில் காட்சிகளாக மாற்ற கூடிய வெகு சில இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. அவரின் பிறந்தநாள் இன்று. பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலம் தெரிவித்து வருகிறார்கள். 


 



சாமானிய மக்களின் குரல் :


2007ம் ஆண்டு வெளியான "கூடல் நகர் " திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடி எடுத்து வைத்தவர். அதனை தொடர்ந்து, தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் என பல வெற்றி படங்களை கொடுத்தவர். அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு இடங்களில் வாழும் மக்களின் வாழ்வியலை மையப்படுத்தியே இருக்கும். சாமானிய மக்களை பற்றி கதையமைப்பில் தேர்ந்தவர் சீனு ராமசாமி. 


 






 


விஜய் சேதுபதியின் குருநாதர் :


இன்று தென்னிந்திய சினிமாவின் பேசப்படும் ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகர் விஜய் சேதுபதி. அவரை திரையில் ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்திய மாமனிதன் இயக்குனர் சீனு ராமசாமி. அதற்கு முன்னர் துணை நடிகராக சில படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் ஒரு ஹீரோ கதாபாத்திரம் வாய்ப்பு கொடுத்தது சீனு ராமசாமி தான். இன்று அவர் வேற லெவலில் இருந்தாலும் தன்னை கை பிடித்து கொண்டு வந்த அந்த குரு நாதரின் மேல் இன்றும் அதே மதிப்பும் , மரியாதையுடனும் இருக்கிறார் விஜய் சேதுபதி. 


விஜய் சேதுபதியின் வளர்ச்சி அபாரமானது :


விஜய் சேதுபதி அறிமுகமான "தென்மேற்கு பருவக்காற்று" திரைப்படம் வெளியான சமயத்தில் தான் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த "மன்மதன் அம்பு" திரைப்படம் வெளியானது. அந்த சமயத்தில் கமல்ஹாசனை பார்த்து மிகவும் பயந்த விஜய் சேதுபதி இன்று அவருடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் திரை பகிர்ந்துள்ளார். ஒரு முறை சீனு ராமசாமி இது குறித்து பேசுகையில் நான் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை பார்த்து பெருமை படுகிறேன். அதை வார்த்தைகளால் சொல்ல இயலாது என பூரிப்புடன் கூறியிருந்தார் இயக்குனர் சீனு ராமசாமி. 


 







விருதுகளை குவித்த மாமனிதன் :


சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை காயத்ரி நடிப்பில் 2022 ம் ஆண்டு வெளியான "மாமனிதன்" திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச திரைப்பட விழா டோக்கியோவில் நடைபெற்றது. அதில்  சிறந்த ஆசிய படத்திற்கான கோல்டன் விருதை "மாமனிதன்" திரைப்படம் பெற்றது. சிறந்த நடிகர், சிறந்த விமர்சகர் தேர்வு, சிறந்த சாதனை என்ற பிரிவுகளின் கீழ் தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.