ஜெமினி படத்தில் மறைந்த நடிகர் கலாபவன் மணியை மிகவும் கஷ்டப்பட்டு நடிக்க வைத்தோம் என இயக்குநர் சரண் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கமர்ஷியல் இயக்குநர் சரண்
தமிழில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி காதல் மன்னன் படத்தின் மூலம் இயக்குநரானவர் சரண். தொடர்ந்து அமர்க்களம், அல்லி அர்ஜூனா, ஜெமினி, ஜே ஜே, பார்த்தேன் ரசித்தேன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், அசல், இதயத்திருடன், வட்டாரம் என பல படங்களை இயக்கி ரசிகர்களிடையே இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறர். இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சரண், நடிகர் கலாபவன்மணியை பற்றி பேசியுள்ளார்.
அதில், “என் மனைவி தான் மலையாளத்தில் கலாபவன் மணி என்ற ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை சொன்னார். எனக்கு அப்போது எந்தவிதமான ஐடியாவும் இல்லை. அந்த சமயம் கலாபவன் மணி ஒரு மேடையில் விலங்குகள் மாதிரி நடித்து காட்டிய வீடியோவைப் பார்த்ததும் சரி பேசி பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. கலாபவன் மணி முதலில் வரமாட்டேன் என சொல்லி விட்டார். காரணம் கேட்டால் மலையாளத்தில் ரொம்ப பிஸியாக இருக்கிறேன் என தெரிவித்தார்.
பின் நான் ரொம்ப கஷ்டப்பட்டு சென்னைக்கு வரவழைத்தேன். வரும்போது கலாபவன் மணி நடிக்க ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்பதை மனதில் வைத்து தான் வந்தார். என்னை சந்தித்தபோது அவர் மேடை நிகழ்ச்சியில் செய்ததை பண்ண சொன்னேன். சுமார் 40 நிமிடங்கள் செய்து காட்டினார். இதையெல்லாம் நீங்கள் ஒரே சீனில் வைக்க முடியாதே என வெள்ளந்தியாக கேட்டார். நான் காட்சிகளைப் பற்றி சொன்னதும் நம்பிக்கையுடன் நடிக்க ஒப்புக்கொண்டார்.
கலாபவன் மணி இறப்புக்கு காரணம்
அதன்பிறகு தான் என்னுடைய கதையில் வில்லனுக்கான கேரக்டரை மறுபடியும் எழுதினேன். கலாபவன் மணியின் உதவியாளர் போன் பண்ணினால் எடுக்க மாட்டார். ஷூட்டிங் தேதி வாங்குவது சிரமம். இருந்தாலும் அதையும் கஷ்டப்பட்டு முடித்தால் டப்பிங் பேசமாட்டேன் என மறுக்கிறார்.
நான் பிடிவாதமாக நீங்கள் தான் பேச வேண்டும் என சொன்னேன். ஜே ஜே, மோதி விளையாடு ஆகிய படங்களில் நடித்தார். அவரின் இறப்பை நான் ரொம்ப மோசமாக உணர்ந்தேன். மோதி விளையாடு பண்ணும்போது நீரிழிவு நோய் தொடர்பான விஷயங்களால் பாதிக்கப்பட்டார். அவர் மிகவும் சோர்வாக தான் இருந்தார். கலாபவன் மணியிடம் இருந்த குடிப்பழக்கம் அவரின் இறப்புக்கான காரணமாக அமைந்து விட்டதோ என நினைக்க வைத்தது. ஜெமினி படத்தில் நடிக்க மறுத்தவர் ஜே ஜே படத்தில் எனக்கு ஒரு கேரக்டர் வேண்டும் என விடாப்பிடியாக இருந்தார்” என கூறியுள்ளார்.