ஸ்ரீவித்யாவுக்கும் தனக்குமான காதல் நிறைவேறாது எனத் தெரிந்தபோது நடிகர் கமல்ஹாசன் ரொம்ப வருத்தப்பட்டதாக இயக்குநர் சந்தானபாரதி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன் அளித்த பேட்டி இணையத்தில் வைரலானது. அதில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் புகைப்படம் காட்டப்பட்டது. அதைப் பார்த்ததும் “ஸ்ரீவித்யா என்னுடைய காதலி, இதை சொல்ல நான் பயப்படவில்லை” என வெளிப்படையாக பதிலளித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. இந்நிலையில் கமல்ஹாசன் - ஸ்ரீவித்யா காதல் குறித்து இயக்குநர் சந்தானபாரதி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் உருவான மஞ்சுமெல் பாய்ஸ், மலையாள மொழியில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  இந்த சம்பவம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் வெளியான நாள் முதல் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் விரைவாக ரூ.100 கோடி வசூலித்த மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 


இந்த படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் சந்தானபாரதி கூட்டணியில் உருவான குணா படமும் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் குணா பட இயக்குநர் சந்தானபாரதி  பல நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அதில் ஒரு நேர்காணலில் “கமலின் நெருங்கிய நண்பரான நீங்கள், கமலுக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் இடையேயான காதல் பற்றி கூறுங்கள்” என கேள்வியெழுப்பப்பட்டது. 




அதற்கு, “கமல்ஹாசன் - ஸ்ரீவித்யாவின் காதல் உண்மையானது. ஸ்ரீவித்யாவுக்கு கமல்ஹாசன் உதவியாக இருந்தார். அவர்களால் வாழ்க்கையில் ஒத்துப்போக முடியவில்லை. அதற்கு சில காரணங்கள் இருந்தன. ஆனால் கடைசி வரை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை சரியாகப் போகவில்லை. இதனால் ஸ்ரீவித்யா மிகவும் கஷ்டப்பட்டார். அதனால் தான் தனது கடைசி நாட்களில் வேறு யாரையும் பார்க்க விரும்பாவிட்டாலும் கமல்ஹாசனை மட்டும் பார்க்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் ஸ்ரீவித்யாவைப் போய் சந்தித்தார். இருவரும் காதலிப்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் தங்களது காதல் நிறைவேறாது என தெரிந்தது கமல் ரொம்ப சிரமப்பட்டார்” என சந்தானபாரதி தெரிவித்திருந்தார். 


அதேசமயம், நடிகர் கமல்ஹாசன் ஸ்ரீவித்யாவுடன் படத்தில் நடிக்கத் தொடங்கியபோது அவரைக் காதலித்தார். ஸ்ரீவித்யாவும் அவரை திருமணம் செய்து குடும்பப் பெண்ணாக வாழ விரும்பினார். ஆனால் ஸ்ரீவித்யாவின் தாய் தனது மகள் இல்வாழ்க்கைக்கு செல்வதை விரும்பவில்லை. இதனால் மகளின் காதல் உறவுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது. 


ஸ்ரீவித்யாவுடனான காதல் விவகாரம் ஒரு முடிவுக்கு வருவதற்குள் கமல்ஹாசன், வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஸ்ரீவித்யா மேலும் நொந்து போயுள்ள்ளார். தொடர்ந்து ஸ்ரீவித்யா வேறொரு திருமணம் செய்து கொண்டபோதும் எதிர்பார்த்தபடி அவரது திருமண வாழ்க்கை அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.