நடிகர் விஜய்க்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் தனிப்பட்ட ரீதியான பிரச்சினைகள், பிரிவு என ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், தாய் ஷோபாவும் அவரைப் பற்றி அளித்த நேர்காணல் ஒன்றில் இருந்து சில உரையாடல்களை இங்கே அளிக்கிறோம்..
விஜயின் நண்பர்களைப் பற்றி கேட்ட போது, எஸ்.ஏ.சந்திரசேகர், `வீட்டில் விஜய் தனது நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவரின் சிரிப்புச் சத்தம் மட்டும் கேட்கும்.. தன் நண்பர்களிடம் பேசும் போது, அவர்கள் சொல்லும் ஜோக்கை அவர் ரசித்துக் கொண்டிருப்பார். அவருக்கு உலகமே அவரது நண்பர்கள் தான். அவர்களோடு தனி உலகத்தில் இருப்பார். மற்றவர்களைப் போல, காலத்திற்கேற்ப நண்பர்களை மாற்றிக் கொள்ளும் பழக்கம் அவருக்குக் கிடையாது. கல்லூரிக் காலத்தில் அவருடன் நண்பர்களான அந்த 5 பேர் மட்டும் தான் இன்றுவரை அவருக்கு நெருக்கம்’ எனக் கூறியுள்ளார்.
விஜய் முதன்முதலாகத் திரைப்படத்தில் பாடியது குறித்து கேட்ட போது அவர், `விஜய் வீட்டில் `ஹம்’ செய்து கொண்டே, பாடிக் கொண்டே இருப்பார். அதனால் தேவா சாரிடம் விஜய் பாடுவதற்காக கேட்டேன். அப்போதெல்லாம் ட்ராக் பாடுவார்கள். அதை பாடகர் கேட்டுவிட்டு, பிறகு வந்து ரெக்கார்டிங்கில் வந்து பாடுவார். அதனால் நாங்களும் ட்ராக் பாடி, விஜயிடம் கொடுத்து விட்டோம். அப்போது விஜய் எங்களிடம் ஒரு கண்டிஷன் போட்டார். `அப்பா, நான் போய் பாடிவிட்டு வருகிறேன். நீங்கள் யாரும் வரக்கூடாது’ என்பது அந்த கண்டிஷன். போன அரை மணி நேரத்தில், மீண்டும் வீடு திரும்பினார். `என்னாச்சுபா?’ என்று கேட்டேன்.. `பாடிட்டேன் பா!’ என்றார். பிறகு தேவா சாரிடம் சென்றேன்.. `நல்லா பாடிருக்காரு சார்!’ என்றார்’ எனத் தெரிவித்துள்ளார்.
தன் மகனோடு பாடல் பாடியது குறித்து, விஜயின் தாய் ஷோபாவிடன் கேட்ட போது அவர், ``தொட்ட பெட்டா ரோடு மேல’ பாடலை விஜய் முதலிலேயே பாடிவிட்டு வந்தார். என்னிடம், `அம்மா நான் பாடிட்டேன். அப்பா கூப்பிடுறாரு.. நீங்க போய் பாடுங்க’ என்றார். அந்தப் பாடலில் என்னை விட அவர் நல்லா பாடிருப்பார். விஜய் பாடுவதை எனது குருவே பெரிதும் விரும்பி பாராட்டுவார். `கில்லி’ படத்தில் காமெடியாக வரும் காட்சி ஒன்றில், `மருதமலை மாமணியே’ பாடலின் `அய்யா’ என்ற சொல்லைச் சரியான சுருதியில் விஜய் பாடியதாக எனது குரு என்னிடம் அடிக்கடி சொல்லிப் பாராட்டுவார்’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து விஜயின் நடனம் குறித்து பேசிய அவரது பெற்றோர், `நடனத்தைத் தனியாக வகுப்பு சென்று கற்றுக் கொள்ளவில்லை. இசை ஞானம் உள்ளவர்களுக்கு ராகம் பற்றிய புரிதல் இருக்கும். அதனால் எளிதாக ஆட முடியும். அவருக்குத் தனியாக இருக்கும் அறையில், ஒரு தொலைக்காட்சியில் பாடல்களைப் பார்த்து தனியாக ஆடிக் கொண்டிருப்பார் விஜய். சிறுவயதில் இருந்தே அவருக்கு இந்தப் பழக்கம் இருந்தது. அந்த அறைக்குள் தனியாக நடனம் ஆடுவார். ஆனால் மற்றவர்களுக்கு முன்பு ஆடுவதை விரும்ப மாட்டார்’ எனக் கூறியுள்ளனர்.
மேலும், `பலரும் விஜயின் நடன மாஸ்டர் யார் என்று கேட்டிருக்கிறார்கள்.. ஆனால் அப்படி அவருக்கு நடன மாஸ்டர் என்று யாரும் இல்லை. அவருக்கு அனைத்தையும் உற்று கவனிக்கும் திறமை உண்டு. ஒருவரைப் பார்த்து அப்படியே செய்யும் திறமை இருப்பதால், அவரால் நன்கு நடனம் ஆட முடிகிறது’ என்றும் தெரிவித்துள்ளனர்.