எப்பவோ முடிந்து போன விஜய் - சங்கீதா விஷயத்தை இப்போது எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து அரசியல் செய்வதாக இயக்குநரும், விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியலில் களம் கண்ட விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய் தற்போது அரசியலிலும் களம் கண்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் களம் கண்டுள்ளார். இதற்காக சினிமா வாழ்க்கையில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். இதனிடையே தேர்தல் தேதி கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கு சில நாட்கள் முன்பு விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
எமனாக அமைந்த விவாகரத்து வழக்கு
இது தமிழக மக்களிடையேயும், விஜய் ரசிகர்களிடையேயும் பெரும் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்து விஜயை தாறுமாறாக விமர்சித்தனர். அதுமட்டுமல்லாமல் சங்கீதா தனது மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் விஜய்க்கு பின்னடைவாக அமையும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை வேறு, அரசியல் பயணம் வேறு என்ற ரீதியில் செயல்பட்டதால் இந்த விவகாரம் அதன்பின் பெரிதாக எடுபடவில்லை. விஜய் - சங்கீதா விவாகரத்து விஷயம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட விசாரணை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜயின் தந்தையாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், “அரசியலாகவோ, சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அரசியலாக்கப்படுகிறதே, பேசப்படும் பொருளாக மாறுகிறது. ஒரு அப்பாவாக இதனை எப்படி பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
எப்போதோ முடிந்து போன விஷயம்
அதற்கு பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், ஆங்கிலத்தில் character assassination என்ற ஒரு வார்த்தை உண்டு. அதாவது நம்முடைய கேரக்டரை படுகொலை செய்வது. கத்தி, இரத்தம் சிந்தி கொலை செய்யாமல் குணாதிசயங்களை கொல்வது என்பது அர்த்தமாகும்.
அப்படியாக விஜய் இப்படிப்பட்டவர், அவர் பெண்களுக்கு எதிரானவர், குடும்பத்துக்கும், அப்பா-அம்மாவுக்கும் எதிரானவர் என சொல்லி அந்த கேரக்டரை சிதைத்து வருகிறார்கள். இது எதிராளிகளுக்கு கைவந்த கலை. அதுதான் தனிமனித தாக்குதலாக முன்னெடுக்கப்படுகிறது. எப்போது அவர்களுக்குள் சமரசமாகி கையெழுத்தான ஒரு விஷயத்தை இப்போது கொண்டு வர வைத்திருக்கிறார்கள். முடிந்த ஒரு விஷயம் வெளியே வர வேண்டும் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். இது எதிர்க்கட்சிகளின் திட்டம் தான். அதற்கு அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் வாய்ப்பு கொடுத்தார்களா என தெரியவில்லை” என கூறியுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன கருத்துகள் மூலம் விஜய், சங்கீதா இருவரும் சுமூகமாக பேசி பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிய வரும் நிலையில், தேர்தல் நேரத்தில் ஏன் இந்த விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என நெட்டிசன்கள் பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
