ரோஹித் ஷெட்டி


பாலிவுட் இயக்குநர்களில் கமர்ஷியல் வெற்றிகளுக்குப் பெயர் போனவர் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. கோலமான், சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ரோஹித் ஷெட்டி தனது இளமைக் காலத்தில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு சண்டைக் காட்சிகளில் டூப் போடுவதில் இருந்து தொடங்கினார். ரோஹித் ஷெட்டியின் தந்தை எம்.பி ஷெட்டி மற்றும் தாயார் ரத்னா ஷெட்டி ஆகிய இருவரும் சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கு டூப் போடும் கலைஞர்களாக இருந்தவர்கள். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ரோஹித் ஷெட்டி தனது பெற்றோர் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.


ரத்தக் காயங்களுட திரும்பி வருவார்!


ஒரு ஸ்டண்ட் ஆர்டிஸ்ட்டாக இருந்த தனது தந்தையை சிறிய வயதில் தனது உடன் படிக்கும் குழந்தைகள் எல்லாரும் பார்த்து பயப்படுவார்கள் என்று ரோஹித் ஷெட்டி கூறியுள்ளார். தனது தந்தையின் உயரம் மற்றும் அவரது கூர்மையான கண்கள் எல்லாம் தான் இதற்கு காரணம் என்றும், ஆனால் உண்மையில் தனது தந்தை மிகப் பணிவாகவும் மிக அன்பாகவும் பழகக்கூடியவர் என்று அவர் தெரிவித்தார்.


பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு தனது தந்தை டூம் போட்டுள்ளதாகவும் அவரது திறமையைப்  பார்த்த நாஸிர் ஹுஸைன் தனது படத்தில் அவருக்கு ஸ்டண்ட் டைரக்டராக வாய்ப்பு கொடுத்ததையும் அவர் விவரித்தார். தீவார், யாதோன் கி பராத், கிரேட் காம்ப்லர், டான்,  மற்றும் திரிசூல் போன்ற படங்களுக்கு தனது தந்தை சண்டைக் காட்சிகள் இயக்கியுள்ளார் என்று ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.


சினிமாவில் தனது தந்தை தான் முதல் முறையாக கண்ணாடியை உடைக்கும் ஸ்டண்ட் காட்சியை பயன்படுத்தியதாகவும் இதனால் பல  நாட்களில் அவர் வீட்டிற்கு ரத்த காயங்களுடனும் தையல்களுடனும் திரும்பியதை தான் பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


தனது தந்தையைப் போல் தனது தாயும் பல்வேறு முன்னணி நடிகைகளுக்கு ஸ்டண்ட் காட்டிகளில் டூப் கொடுத்துள்ளார் என்று அவர் தெரித்தார். அன்றைய புகழ்பெற்ற நடிகைகளாக இருந்த ஹேமா மாலினி மற்றும் வைஜயந்தி மாலா உள்ளிட்டவர்களின் புகழ்பெற்ற சண்டைக் காட்சிகளில் தனது அம்மா நடித்துள்ளதாக அவர் கூறினார்.


தனது பெற்றோரைப் போலவே தானும் தனது சினிமா பயணத்தை ஒரு ஸ்டண்ட் மாஸ்டராக தொடங்கினார் ரோஹித் ஷெட்டி . தனித்துவமான அவரது சண்டைக் காட்சிகள் பரவலான கவனம் பெற்றிருக்கின்றன, இதனால் பலமுறை தனது எலும்புகளையும் உடைத்துக் கொண்டிருக்கிறார் அவர். இது தன்னுடைய குடும்ப வழக்கமாகிவிட்டது என்று அவர் நகைச்சுவையாகவும் கூறியுள்ளார்.


சிங்கம் அகெயின்


தற்போது ரோஹித் ஷெட்டி அக்‌ஷய் குமார், ரன்பீர் சிங் மற்றும் அஜய் தேவ்கன் ஆகிய மூவரை வைத்து சிங்கம் அகெயின் படத்தை இயக்கி வருகிறார், இந்த மூன்று நடிகர்களும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.