நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் ஏன் இவ்வளவு தாமதமாக வெளியாகவுள்ளது என்பது குறித்து அப்படத்தின் இயக்குநர் ரவிகுமார் நேர்காணல் ஒன்றில் பதிலளித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘இன்று நேற்று நாளை’. இந்த படத்தை இயக்கி இயக்குநராக ரவிக்குமார் அறிமுகமாகியிருந்தார். அவரின் அடுத்தப்படமாக 2016 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிக்கும் “அயலான்” படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாகவும் முக்கிய கேரக்டர்களில் சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
ஏலியன் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள அயலான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. மேலும் பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் இயக்குநர் ரவிகுமார் ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் அயலான் படம் ஏன் இவ்வளவு தாமதம் என்பதற்கு பதிலளித்துள்ளார்.
அதாவது, ‘இன்று நேற்று நாளை படம் வெளியான 2வது நாள் சிவகார்த்திகேயன் படம் பார்த்துட்டு போன் பண்ணினார். அப்போது அவரிடம் ஏலியன் வச்சு படம் பண்ணும் ஐடியாவை சொல்லலாம் என நினைத்தேன். தொடர்ந்து கருணாகரன் மகளுடைய பிறந்தநாள் விழாவுக்கு வந்தவரிடம் இந்த ஐடியாவை தெரிவித்தேன். சிவகார்த்திகேயனோ, ரொம்ப நல்லாருக்கு. கதையை டெவலப் பண்ணுங்க என சொன்னார். அப்படித்தான் ‘அயலான்’ உருவானது. இந்த படத்தின் பட்ஜெட், இன்று நேற்று நாளை படத்தின் பட்ஜெட்டை விட 25 மடங்கு அதிகம்.
2018 ஆம் ஆண்டு ஷூட்டிங் போன நிலையில் முதல் ஷெட்யூலில் கிட்டதட்ட 50% படப்பிடிப்பு முடிவடைந்தது. ஆனால் அதன்பிறகு நாங்கள் திட்டமிட்டது எதுவும் நடக்கவில்லை. தயாரிப்பாளருக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் படத்தை எப்படியாவது முடிச்சிரலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. மீண்டும் 2019 ஆம் ஆண்டு ஷூட்டிங் போன நிலையில் அதுவும் நின்னு போச்சு. என்னிடம் நிறைய படம் இந்த படத்தை விட்டுட்டு வேறொரு படம் பண்ணலாம் என சொன்னார்கள். அயலான் படத்துக்கு நிறைய பிராஸ்சஸ் பண்ணி வச்சிருந்தோம்.
அதனை விட்டுட்டு இன்னொரு படம் பத்தி யோசிக்கிறது எப்படி முடியும்? என்பதால் அதில் எனக்கு உடன்பாடில்லை. முதல் பட விமர்சனம் தான் இரண்டாவது படம் உருவாக காரணம். இந்த படத்தின் மதிப்பீடு தான் அடுத்தடுத்த படங்கள் வர காரணமா இருக்கும். அதனால் அயலான் படத்தை கொண்டு வர்றது தான் ஒரே வழி என நம்பிக்கையோடு காத்திருந்தேன். 2020 ஆம் ஆண்டு ஷூட்டிங் தொடங்கினார்ல் கொரோனா ஊரடங்கு வந்துடுச்சி. 2021 ஆம் ஆண்டு தான் கடைசி 50 நாட்கள் படப்பிடிப்பை எடுக்க 3 வருஷமாச்சு. விஎஃப்.எக்ஸ். வேலைகள் நிறைய இருக்குறது தான் தாமதம் ஆகிருக்கு” என ரவிகுமார் கூறியுள்ளார்.