கராத்தே பாபு
ஜெயம் படத்தில் அறிமுகமான ரவி அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டு வந்தார். ஆனால் சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். இதனிடையே, காதலிக்க நேரமில்லை படத்தில் ரவி மோகன் என்றே டைட்டிலில் வந்தது. காதலிக்க நேரமில்லை படம் ஜெயம் ரவிக்கு ஓரளவு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்கு கமிட் ஆகி வருகிறார் ஜெயம் ரவி.
அந்த வரிசையில் தற்போது டாடா படம் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கராத்தே பாபு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் டீசரும் இது முழுக்க முழுக்க அரசியல் படம் என காட்டியது. அதுவும் இந்த படம் அமைச்சர் சேகர் பாபுபின் கதையா என்கிற கேள்வியும் எழுந்திருந்தது.
சேகர் பாபுபின் கதையா கராத்தே பாபு ?
இதுகுறித்து படத்தின் திரைக்கதை ஆசிரியர் ரத்னகுமார் தெரிவித்தபோது " இது தனிப்பட்ட ஒரு நபரை மையப்படுத்திய படம் கிடையாது. புதுப்பேட்டை படத்தை எடுத்துக் கொண்டால் அதில் யாருடைய சாயலும் தெரியாது. அந்த மாதிரி ஒரு தனி மனிதன் தன்னை அரசியலில் காப்பாற்றிக் கொள்ள என்னவெல்லாம் செய்கிறான் என்பதே இப்படத்தின் கதை. எந்த வித தனி நபரின் வாழ்க்கை வரலாறோ கிடையாது. யாரை வைத்து எடுத்திருக்கிறோமோ அவர்கள் படத்தைப் பார்த்தாலே தெரியாது இது அவர்தான் என்று" என ரத்னகுமார் கூறியுள்ளார்.
கராத்தே பாபு டீசரில் வந்த பல விஷயங்கள் அமைச்சர் சேகர்பாபுவின் அரசியல் வாழ்க்கையோடு பொருந்தி போனதால் இது அவரைப் பற்றிய படம்தான் என ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.