ராம்

தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைசொல்லி இயக்குநர் ராம் . கற்றது தமிழ் படத்தின் மூலமாக தமிழ் சமூக பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இயக்குநர் ராம் தொடர்ந்து தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். உலகமயமாக்கல் அதன் விளைவாக தனிமனிதர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் நெருக்கடிகள், தனிமனித அகத் தேடல்களை இவரது கதைகள் மையமாக கொண்டிருப்பவை. ராமின் படங்கள் குறித்து பாசிட்டிவாகவோ நெகட்டிவாகவே தொடர்ச்சியான விவாதங்கள் நடந்து வருவதே இவரது படங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. அந்த வகையில் பேரன்பு படத்திற்கு பின் இரண்டு படங்களை இயக்கி முடித்துள்ளார் ராம்.

ஏழு கடல் ஏழு மலை 

நிவிம் பாலி , அஞ்சலி , சூரி நடித்து ராம் இயக்கியுள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. வரும் மார்ச் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பறந்து போ

அடுத்தபடியாக மிர்ச்சி ஷிவா இயக்கத்தில் ராம் இயக்கியுள்ள படம் பறந்து போ. மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அஞ்சலி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். குழந்தைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் ராம் மற்றும் மிர்ச்சி ஷிவா காம்போவில் புதுவிதமான அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் . வழக்கமாக ராம் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் நிலையில் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி என்பவர் இசையமைத்துள்ளார். சர்வதேச திரைப்பட விழாவான ராட்டர்டாம் திரைப்பட விழாவில் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி இப்படம் திரையிடப்பட இருக்கிறது. இப்படத்தில் மொத்தம் 23 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக படத்தின் பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.