பாரதிராஜா படங்களை பார்த்து தான் கலை மீது தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாக இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த ”Modern Love Chennai”
Modern Love Chennai என்ற பெயரில் புதிதாக ஆந்தாலஜி படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூ முருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்ஷய் சுந்தர், தியாகராஜன் குமாரராஜா என 6 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இசையமைப்பாளர்களாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார், ஷான் ரோல்டன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இந்த ஆந்தாலஜி கதையில் ரிது வர்மா, அசோக் செல்வன், ரம்யா நம்பீசன், வாமிகா, ஸ்ரீ கௌரி பிரியா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், அனிருத் கனகராஜன், டி.ஜே.பானு, சஞ்சுலா சாரதி, சூ கோய் ஷெங், ஸ்ரீகிருஷ்ண தயாள், வாசுதேவன் முரளி, வசுந்தரா, கிஷோர், விஜயலட்சுமி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ட்ரெய்லர் வெளியீட்டு விழா
இந்த Modern Love Chennai ஆந்தாலஜி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் ராஜூ முருகன், “என்னுடைய அப்பா ராமநாதபுரத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். 7 வயதில் என் அப்பாவை ஒருநாள் பார்க்க சென்று விட்டு இரவு ஊருக்கு திரும்ப பஸ் கிடைக்கவில்லை. அப்போது எங்கே தங்கலாம்? என யோசித்துக் கொண்டிருந்தபோது முதல் முறையாக என் அப்பா என்னை கடலோர கவிதைகள் படத்துக்கு அழைத்து சென்றார். முதல்முறையாக நான் தியேட்டருக்கு சென்றேன். அப்ப நான் சின்ன பையன்.. இப்ப பாரதிராஜா சின்ன பையன்.. அப்படியே இன்னும் இருக்காரு.
அந்த படம் பார்த்த போது கிடைத்த அனுபவம், என்னை கலைக்கு அழைத்து வந்தது அந்த படம்தான். அந்த படத்தை 100 முறைக்கு அதிகமாக பார்த்துள்ளேன். அதனால் பாரதிராஜா எனக்கு ஸ்பெஷல். இதை அவரிடம் வெளிக்காட்டியதில்லை.
கொரோனா காலக்கட்டத்தில் மாடர்ன் லவ் ஆந்தாலஜி பற்றி தியாகராஜா குமாரராஜா சொன்னாரு. எனக்கு மாடர்ன் லவ் என்றால் என்ன தெரியாது. எதை எழுதினாலும் அதில் அரசியல் வந்து விடுகிறது. அது சிக்கலாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.
எல்லாவற்றிற்கும் alternate வந்து விட்டது. மனிதனுக்கு alternate இல்லாத ஒரு விசயம் காதல் மட்டும் தான் காமத்தை கூட மிஷினால் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் அன்பை தர முடியாது. வன்முறைக்கு மாற்று அன்பு மட்டும் தான். அடிப்படையில் நாம் வேட்டையாடும் மிருகங்கள் தான். அதனால் தான் அம்பேத்கரும் பெரியாரும் தொடர்ந்து கூறிய விசயம் மனிதம்தான். அதை அன்பால் தான் கொடுக்க முடியும். ஓரினச்சேர்க்கை, வாடகைத்தாய் என அன்பு பரவி உள்ளது” என கூறினார்.