பெரிய படமோ, சின்ன படமோ கொள்கையை எப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக திணிக்க முயற்சிக்க வேண்டும் என பட விழாவில் இயக்குநரும், நடிகருமான ராஜ் கபூர் தெரிவித்துள்ளார்.


நம்பிராஜன் இன்டர்நேஷனல் சினிமாஸ் சார்பில் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கியுள்ள படம் “உழைப்பாளர் தினம்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரான ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநர் ராஜ்கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜ்கபூர், “எனக்கு ஒரு கட்சி அலுவலகத்தில் இருப்பது போன்ற உணர்வை இந்நிகழ்ச்சி ஏற்படுத்துகிறது. இங்கே உட்கார வைத்து என்னையும் கம்யூனிஸ்ட் ஆளாக மாற்றி விடுவார்கள் போல!" - பொதுவாக இசை வெளியீட்டு விழாவில் எல்லாம் சினிமா பிரபலங்களை அழைத்து பெரிதாக பண்ணுவார்கள். ஆனால் இந்நிகழ்சியில் உழைப்பாளர்களுக்கு என்று உழைக்கக்கூடிய இயக்கத்தின் தலைவரை அழைத்து வந்து இந்த மேடையை அலங்கரிக்க வைத்தது புதிதாக உள்ளது. 


உழைப்பாளர் தினம் படக்குழுவை பற்றி பெரிதாக தெரியவில்லை. நண்பர் கேட்டுக்கொண்டதன் பேரில் பங்கேற்றுள்ளேன். இப்போதெல்லாம் சினிமாவில் தலைப்புக்கும், கதைக்கும் சம்பந்தம் இல்லாமல் படம் எடுக்கிறார்கள். ஆனால் உழைப்பாளர் தினம் படத்தின் ஒன்லைனை சொன்னதும் ரொம்ப நெகிழ்ச்சியாகி விட்டது. ஆடுஜீவிதம் மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த படத்தில் பாதி சிங்கப்பூரில் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லியுள்ளார்கள். அதற்காகவே மக்கள் வருவார்கள். 


இப்படத்தின் இயக்குநர் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும்போது அவர் பட்ட வலிகள் தெரிகிறது. ஆனால் அதெல்லாம் நம் ஊரில் ஒர்க் அவுட் ஆகாது. நாம் என்னதான் கத்தினாலும் இதான் நிலைமை. மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு முதல் படம் எடுக்கிறார்கள். ஆனால் அதற்கு அடுத்த அடி அவர்களை வளர விடக்கூடாது என்பதில் பெரிய ஹீரோக்கள் உறுதியாக இருக்கிறார்கள். உடனே அவர்களை அழைத்து பெரிய சம்பளத்தை நிர்ணயித்து அந்த இயக்குநர்களை அனுப்பி விடுவார்கள். இதுதான் உண்மை. பெரிய படமோ, சின்ன படமோ கொள்கையை எப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக திணிக்க முயற்சிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், மாரி செல்வராஜை குறிப்பிட்டு  பேசியுள்ளது பலருக்கும் எந்த பெரிய ஹீரோவை இயக்குநர் ராஜ்கபூர் சொல்கிறார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அதன்பிறகு தனுஷை வைத்து கர்ணன், உதயநிதியை வைத்து மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.