நீ வருவாய் என படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து அப்படத்தின் இயக்குநர் ராஜகுமாரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி பார்த்திபன், தேவயானி, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியான படம் “நீ வருவாய் என”. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்த இப்படத்தில் அஜித் சிறப்பு தோற்றத்தில் பிளாஸ்பேக் காட்சியில் மட்டும் நடித்திருந்தார். அந்த கேரக்டரை மையமாக கொண்டு தான் கதை நகரும் என்பதால் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். படமும், பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக இருந்த ராஜகுமாரன் நீ வருவாய் என படத்தை இயக்கியிருந்தார். வங்கி மேலாளராக கிராமத்தில் வரும் பார்த்திபன் தேவயானியை காதலிக்கிறார். ஆனால் அவரோ பார்த்திபனை காதலிக்காமல் அவரது கண்களை மட்டுமே காதலிக்கிறார். அது ஏன் என்பதை சுவாரஸ்யமாக சொல்லிய படம் இது. இதில் தேவயானியோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடக்கவிருந்த நிலையில் விபத்தில் அஜித் இறந்து விடுவார். அவரது கண்ணை அதே நேரம் விபத்தில் பார்வை இழந்த பார்த்திபனுக்கு பொருத்துவது போல கதை அமைக்கப்பட்டிருக்கும்.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ராஜகுமாரன், முதலில் அஜித் ஓகே ஆனவுடன், பார்த்திபன் கேரக்டரில் நடிக்க விஜய்யிடமும் பேசப்பட்டது. அவரோ தேதியில்லை 15 நாட்கள் தருகிறேன். பிளாஸ்பேக் காட்சியில் வேண்டுமானால் நடிக்கிறேன்.ஹீரோவாக அஜித்தை செய்ய சொல்லுங்கள் என சொன்னார். நேராக அஜித்திடம் விஷயத்தை சொன்னால் அவரோ என்னால் முடியவே முடியாது என்றார்.
காரணம் படம் முழுக்க ஹீரோவை ஹீரோயின் காதல் இல்லை என சொல்லியே வேண்டாம் என சொல்லுவார். இப்படி இருந்தால் ஹீரோயிசம் இருக்காது. இப்படித்தான் நடிகர் மோகன் படம் ஒன்றில் நடித்து மார்க்கெட் குறைந்தது. அதனால் என்னால் முடியாது. தைரியம் இருந்தால் விஜய்யை பண்ண சொல்லுங்கள் என அஜித் சொல்லிவிட்டார். மேலும் நான் இக்கதையை விக்ரமனிடன் உதவியாளராக சேர்வதற்கு முன்பே எழுதி வைத்துவிட்டேன்.
அதன்பிறகு கதையை யாருக்கு சொல்லலாம்ன்னு முடிவு பண்ணேன். விஜய்க்காக எழுதுன கதை இதுதான் என்பதால் பார்த்திபனுக்காக சில விஷயங்கள் மாற்றம் செய்தேன் என ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.