தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் ராஜகுமாரன். நடிகை தேவயானியின் கணவர். குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படம் தருவதில் வல்லவர். அப்படித்தான் இவர் கோடம்பாக்கத்தில் அறியப்படுகிறார். நல்ல நடிகரும் கூட. இவர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்த கடுகு என்ற படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


புலி வேடம் போடும் கலைஞன் ராஜகுமாரன். அந்தக் கலை மெல்ல மெல்ல அழியும் தருவாயில் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் உதவியாளராக சேர்கிறார். புதிதாய் வந்த ஊரில் ராஜகுமாரனுக்கு இரு நண்பர்கள் கிடைக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சிக்காக புலி வேடம் போடும் ராஜகுமாரன், அங்கே நடந்த சம்பவத்துக்காக கலங்குறார், கண்ணீர் வடிக்கிறார், பாடம் புகட்டப் புறப்படுகிறார். நடந்தது என்னவென்பதுதான் மீதிக் கதை. இப்படி பன்முகத்தன்மை கொண்ட இயக்குநர் ராஜகுமாரன் தனக்கு நேர்ந்த சில மோசமான அனுபவங்கள் பற்றி பேசியுள்ளார். 


அவரது பேட்டி தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தை பற்றி தான் அவர் தனது பேட்டியில் பேசியிருந்தார். 2001-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் விக்ரம், தேவயானி, சரத்குமார், குஷ்பூ எனப் பலரும் நடித்திருப்பார்கள்.


திரைப்படத்தில் கதைப்படி தேவயானி ஒரு நடிகை. அவரை விக்ரம் ஒருதலையாக காதலிப்பார். அவரது காதலை நிறைவேற்ற அண்ணன் சரத்குமாரும், அண்ணி குஷ்புவும் பாடாய்ப்படுவார்கள். இதுதான் கதை.
இந்தப் படத்தை சூப்பர்குட் ஃபில்ம்ஸ் தயாரித்திருந்தது.


இப்படத்திற்காக சரத்குமார் 20 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். ஆனால் 17 நாட்களிலேயே இனி வர முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதைப் பற்றி தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தன்னிடம் சொன்னதையும் அடுத்தடுத்து நடந்ததையும் இயக்குநர் ராஜகுமாரன் பேசியுள்ளார்.


அவர் கூறியதாவது:


தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி என்னிடம் பதட்டமாக வந்து பேசினார். சரத்குமார் இனி இப்படத்தில் நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டு போய்ட்டார். இனி என்ன செய்யப்போகிறாய் என்றார். நான் அவரிடம் ஒன்றும் பிரச்சனை இல்லை சார். படத்தில் அவருடைய காட்சிகள் எல்லாமே முடிந்துவிட்டது. ஒரு ஃபைட்டும், ஒரே ஒரு காட்சியும், சில பேட்ச் ஒர்க்கும் தான் இருக்கு என்றேன். ஆர்.பி.சவுத்ரி சாருக்கு ஒரே ஆச்சர்யம். என்ன சொல்றீங்க என்று கேட்டார். நான் ஆமாம் சார் என்றேன். அந்த ஒரு சீன் எப்படி எடுப்பீர்கள் என்றார். சார் அதை குஷ்புவை வைத்து மேனேஜ் பண்ணிடுவேன் என்றேன். அது தேவயானியை பெண் கேட்டுச் செல்லும் சீன். அதில் சரத்குமார் இல்லாமலேயே மேனேஜ் செய்தேன். ஃபைட் அவருடைய இமேஜுக்காக வைத்துள்ளேன் சார். அவர் வந்தால் ஓகே என்றேன். படக் காட்சிகளை அவ்வாறு அவர் இல்லாமல் எடுத்ததில் சரத்குமார் கோபமடைந்துவிட்டார். அவர் ஆர்.பி.சவுத்ரியிடம் பேசினார், குஷ்புவிடம் பேசினார். எல்லோரும் என்னை கைக்காட்டி கழன்றுவிட எனக்கே ஃபோன் செய்தார்.


நான் இல்லாமல் எப்படி காட்சிகளை எடுப்பீர்கள். அட்ரஸ் சொல்லுங்கள் 10 நிமிடங்களில் ஆட்கள் இருப்பார்கள். உங்கள் சாம்பல் கூட கிடைக்காது என்று மிரட்டினார். உனக்கு பயமே இல்லை என்று கோபப்பட்டார். ஆனால் அப்புறம் எல்லாம் சரியாகிவிட்டது. பிரின்டை எடுத்துக் கொண்டு சரத்குமாரிடம் சென்றேன். அவர் என்னை ஆசிர்வதித்து அனுப்பினார். கூட ராதிகா மேடமும் இருந்தாங்க. இன்னிக்கும் எனக்கு சரத்குமார் சாரை வைத்துப் படம் எடுக்க ஆசையாக இருக்கிறது.




நடிகர் விக்ரமை கிராமப்புறங்களில் கொண்டு சேர்த்தது எனக்கும் பங்கு என்றால் அது மிகையல்ல. அவர் அன்று என்மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தார். இன்று மிகப்பெரிய நடிகராக உருவாகிவிட்டார். இன்றும் அவர் என் மீது அன்போடு தான் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


இவ்வாறு ராஜகுமாரன் பேசினார்.