விக்ரமின் 64 வது படத்தை இயக்குநர் பிரேம்குமார் இயக்கப் போவதாக கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியானது. ஆனால் சில காரணங்களால் அந்த படப்பிடிப்பு தாமதமானதால், அவர் அடுத்ததாக ஃபகத் ஃபாசிலை வைத்து புதிய படத்தை இயக்கப் போவதாக தெரிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கான காரணத்தை கலாட்டா பிளஸ் யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரேம்குமார் பகிர்ந்துகொண்டுள்ளார் .
விக்ரம் படம் தள்ளிப்போக காரணம் என்ன
" பொதுவாக முழு திரைக்கதையை எழுதி முடித்த பின்னரே நான் நடிகர்களுக்கு கதை சொல்வேன். அந்த மாதிரி 92 இரண்டாம் பாகத்திற்கான கதை முழுவதுமாக எழுதி முடித்தும் அந்த படத்தை எடுக்க முடியவில்லை. பல்வேறு நடிகர்கள் இதற்காக ஒன்றுதிரள வேண்டியதாக இருக்கிறது. சினிமாவில் மிக அழகான விஷயமே இந்த நிச்சயமின்மைதான். ஒரு படத்திற்கான அனைத்து விஷயங்களும் ஒன்றுதிரண்டு வரும் போது அது காலத்திற்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த நிச்சயமின்மையை நாம் குறை சொல்ல முடியாது. விக்ரம் சார் படத்தைப் பொறுத்தவரை நான் அவருக்கு மூன்று கதைகள் சொன்னேன். அதில் ஒரு கதை அவருக்கு பிடித்து இதை பண்ணலாம் என்று பேசினோம். அந்த படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு வரும்போது அவருக்கு அந்த கதை பிடிக்கவில்லை. நான் சொன்ன வேறு ஒரு காதல் கதை பிடித்திருந்தது. அதை முழுவதுமாக எழுத எனக்கு கொஞ்சம் காலம் தேவைப்பட்டது. மேலும் அந்த படத்தின் பட்ஜெட்டும் பெரிது என்பதால் அதை தாமதமாக எடுக்க முடிவு செய்தோம். நிறைய படங்கள் அறிவிக்கப்பட்டு பின் எடுக்காமல் போவதற்கு இதுதான் காரணம். படத்தின் ஒன்லைன் கேட்டுவிட்டு நடிகர்கள் ஓக்கே சொல்லிவிடுவார்கள். ஆனால் திரைக்கதையாக எழுதிவிட்டு வரும் போது அவர்கள் கற்பனை செய்தது போல் அந்த கதை இல்லையென்றால் அதில் ஆர்வமிழந்துவிடுவார்கள். " என பிரேம்குமார் தெரிவித்தார்.
96 படத்தின் மூலம் புகழ்பெற்ற பிரேம்குமார், கடந்த ஆண்டு மெய்யழகன் படத்தை இயக்கினார். அடுத்தபடியாக ஃபகத் ஃபாசில் நடிக்க இருக்கும் ஆக்ஷன் திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். ஜனவரி மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருக்கின்றன. இதுவரை தான் எடுத்த படங்களை காட்டிலும் இப்படம் புது விதமாக இருக்கும் என பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.