இயக்குநர் ப்ரவீன் காந்தி, `கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றி குறித்து பேசும் போது, விஜய்க்கு எதிரான அஜித் ரசிகர்கள் அதனை ப்ரோமோட் செய்தார்கள் என்று கூறப்படுகிறது, வேண்டுமென்றே அந்தப் படத்தை சூப்பர், சூப்பர் என்று சொல்லி அதனை ஹிட் செய்ததாக ஒரு சாரார் கூறுகிறார்கள். ஆனால் அப்படி நடந்தால், ஆடியன்ஸ் ஒரு ஷோ தான் பார்ப்பார்கள். அந்தப் படம் தரமாகவும், மக்கள் எதிர்பார்ப்பதை அந்தப் படம் காட்டியிருப்பதாலும் மக்கள் அதனைப் போய் பார்க்கிறார்கள்.. இதே போன்ற ஒரு டென்ஷனை கடந்த 40 ஆண்டுகளாக நாம் கொடுத்துக் கொண்டிருந்தோம்.. இப்போது அவர்கள் கொடுக்கிறார்கள்.. எனவே இதில் மொழியைப் பேசக் கூடாது.. கலைஞர்களின் அர்ப்பணிப்பைப் பேச வேண்டும். ஒரு பார்வையாளனாக `கொடுத்த காசுக்குத் தலைவன் பின்னிட்டான்பா’ என்று சொல்ல வைக்க வேண்டும். அப்படி ஏற்படும் கொண்டாட்டம் என்பது பணத்தை விட பெரியது என நினைக்கிறேன்.. ஏன் என்றால் பணம் தானாக வந்துவிடும். இன்னைக்கு கேஜிஎஃப் படத்தின் லாபத்தில் 30 சதவிகிதம் ஹீரோவுக்கு என்றால் அதுவே பெரிய லாபம். அதுபோல இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.



புதிதாக உருவாகி வரும் இளம் இயக்குநர்கள் குறித்து பேசிய ப்ரவீன் காந்தி, `நமக்கு வாழ்க்கை அனுபவம் என்று ஒன்று இருக்கிறது. அவை நமக்கு கதாபாத்திரங்களை உருவாக்க உதவும். எனக்கு சின்ன வயதிலேயே வெற்றி கிடைத்துவிட்டதால் என்னால் அதனைத் தொடர்ந்து தூக்கிக் கொண்டு செல்ல முடியவில்லை. எனக்கு ரொம்ப சின்ன வயதிலேயே மிகப் பெரிய வெற்றியும் அங்கீகாரமும் கிடைத்தவுடன், அதை வைத்துக் கொள்ளும் அளவுக்கு எனக்கு பக்குவம் இல்லை. அதனால் நான் பலவற்றைத் தவற விட்டேன்.. தற்போது இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு தரக்கூடாது என்பது இதன் பொருள் அல்ல. ஆனால் ஒரு சில இயக்குநர்கள் பட்ஜெட்டை அதிகரித்துவிடுவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.. அது தவறு’ என்று கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், `சமீபத்தில் ஆர்.கே.செல்வமணி சாரும், ரஜினி சாரும் படம் பண்ணுவதாக இருந்தனராம்.. அப்போது ரஜினி சார் ஒரு கண்டிஷன் மட்டும் போடுவதாக சொன்னாராம்.. இவரும் கதையில் மாற்றம் ஏதேனும் சொல்வார் என எதிர்பார்த்திருக்கிறார்.. அப்போது ரஜினி சார், `இந்தப் படம் எப்படி ஓடுது.. எப்படி பேசப்படுது.. இதெல்லாம் அப்புறம்.. ஆனால் என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர் லாபம் பார்க்க வேண்டும்’ என்றாராம்.. இதுதான் அவரை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறது. அவர் இன்னமும் இதே கொள்கையுடன் தான் இருக்கிறார்.. இந்த சிந்தனை ஹீரோக்களுக்கு மட்டுமல்ல, புதிய இயக்குநர்களுக்கு வர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.