பிரபு சாலமன்


தனது படங்களின் மூலம் புதுமுக நடிகர்களுக்கு அடையாளம் கொடுத்தவர் இயக்குநர் பிரபு சாலமன். நடிகை அமலா பால் முன்பே திரையில் அறிமுகமாகி இருந்தாலும், மைனா படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.  அதே நேரம் கும்கி படமும்  நடிகர் பிரபுவின் மகனான விக்ரம் பிரபு மற்றும் லக்‌ஷ்மி மேனன் ஆகிய இருவருக்கும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.


தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கயல் படம் கயல் ஆனந்திக்கும் ,தொடரி படம் கீர்த்தி சுரேஷுக்கு அவர்களில் திரைப் பயணத்தில் முக்கியமான படங்களாக அமைந்தன. புதுவிதமான கதைகளின் மூலம் எதார்த்தத்தைவிட பெரிய அனுபவம் ஒன்றை தனது படங்களில் கொடுப்பதற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்து வருபவர் பிரபு சாலமன். இவரது படங்களில் இயற்கை, இயற்கை நிகழ்வுகள், அல்லது எதிர்பாராத நிகழ்வுகளே கதைகளை பெரியளவில் நகர்த்திச் செல்லும் அம்சங்களாக இருக்கின்றன. தற்போது தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்.


நாயகனாகும் வனிதா விஜயகுமாரின் மகன்


பிரபு சாலமன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நாயகன் வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி. தற்போது விஜய் ஸ்ரீஹரிக்கு 25 வயதாகிறது. சின்ன வயதில் இருந்தே அவர் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தபடி இருப்பதாக விஜய் ஸ்ரீஹரியின் தந்தை ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


நிறைய வாய்ப்புகள் வந்தாலும் முன்னணி இயக்குநரின் படத்தில் அறிமுகமானால் நல்ல ஓப்பனிங்காக நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான் தனது அடுத்த படத்திற்காக பிரபு சாலமன் புதுமுகத்தை தேடி வருவதாக தெரிய வந்துள்ளது. விஜய் ஸ்ரீஹரியை பிரபு சாலமன் உடனே ஓகே சொல்ல படப்பிடிப்பிற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இப்படம் கும்கி படத்தைப் போல் மிருகங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் படமாக இருக்கும் என்றும் யானைக்கு பதிலாக இந்த படத்தில் புலி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் படத்திற்காக சிறப்பு பயிற்சிகள் சிலவற்றை விஜய் ஸ்ரீஹரி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.


மகளை அறிமுகம் செய்யும் பிரபு சாலமன் 






இந்நிலையில், இப்படத்தில் இயக்குநர் பிரபு சாலமன் தனது மகள் ஹேஸ்ல் ஷைனியை நாயகியாக அறிமுகம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சமூக வலைதளத்தில் பிரபலமானவர் ஹேஸல் ஷைனிக்கு இப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.