பிரபு சாலமன்
அமலா பால் , கயல் ஆனந்தி , கீர்த்தி சுரேஷ் என பல்வேறு பிரபல நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பிரபு சாலமன். மைனா , கும்கி , கயல் உள்ளிட்ட தனித்துவமான படங்களை இயக்கியுள்ளார். புதுவிதமான கதைகளின் மூலம் எதார்த்தத்தைவிட பெரிய அனுபவம் ஒன்றை தனது படங்களில் கொடுப்பதற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்து வருபவர் பிரபு சாலமன். இவரது படங்களில் இயற்கை, இயற்கை நிகழ்வுகள், அல்லது எதிர்பாராத நிகழ்வுகளே கதைகளை பெரியளவில் நகர்த்திச்செல்லும் அம்சங்களாக இருக்கின்றன. தற்போது தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்.
நாயகனாக அறிமுகமாகும் வனிதா விஜயகுமாரின் மகன்
பிரபு சாலமன் இயக்கும் இப்புதிய படத்தில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். தற்போது இவருக்கு 25 வயதாகிறது. சிறு வயதில் இருந்தே விஜய் ஸ்ரீ ஹரி நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். நிறைய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தும் முன்னணி இயக்குநரின் படத்தில் அறிமுகமானால் அவருக்கு நல்ல ஓப்பனிங்காக இருக்கும் என்று அவரது பெற்றோர்கள் கருதினர்.
இயக்குநர் பிரபு சாலமன் தனது அடுத்தப் படத்திற்காக புது முகத்தை தேடி வந்ததாகவும் விஜய் ஸ்ரீ ஹரியை பார்த்ததும் அவர் ஓக்கே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பிரபு சாலமனின் மகள் ஹேஸ்ல் ஷைனி இப்படத்தில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
நிஜ சிங்கத்துடன் படப்பிடிப்பு
இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மாம்போ என்று இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிஜ சிங்கத்தை வைத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக இந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிஜப் புலியை பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் ஆசியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்காக விஜய்ஸ்ரீ ஹரி சிறப்பு பயிற்சி எடுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாம்போ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹாலிவுட்டில் வெளியான லைஃப் ஆப் பை படத்தைப்போல் இப்படத்தின் கதை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது