சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ரஜினி முருகன் படத்தின் 2 ஆம் பாகத்திற்கான கதை ரெடியாக இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. பொன்ராம் இயக்கிய இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். பாடல்கள் சூப்பர்ஹிட்டான படமும் திரையுலகமே எதிர்பார்க்காத வகையில் மெஹா ஹிட் ஆனது. இந்த ஒரே படத்தால் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையே உச்சத்திற்கு சென்றது என சொல்லலாம்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்ராமுடன் ரஜினி முருகன், சீமராஜா ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். ஆனால் சீமராஜா படம் படுதோல்வி அடைந்ததால் இந்த கூட்டணி பிரிந்தது. இதனையடுத்து பொன்ராம் சசிகுமாரை வைத்து எம்ஜிஆர் மகன் படம் எடுத்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தான் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி என்ற படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார்.
வாஸ்கோடகாமா என்ற போலீஸ் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில் ஹீரோயினாக அனு க்ரீத்தி நடித்துள்ளார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், இளவரசு, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 2 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ள நிலையில் பல நேர்காணல்களில் பொன்ராம் பங்கேற்றுள்ளார்.
அதில் ரஜினிமுருகன் படத்தின் 2 ஆம் பாகத்திற்கான கதையை ரெடி பண்ணியதாகவும், இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம் பெற்ற சிவாவின் போஸ் பாண்டி கேரக்டரை இணைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் கதைக்கு சிவா ஓகே சொன்னதாகவும் கூறப்படுவதால் விரைவில் ரஜினிமுருகன் 2 உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிமுருகன் படத்தில் சிவா ஹீரோவாக நடித்த நிலையில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருந்தார். ஏற்கனவே இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் போஸ் பாண்டி கேரக்டரை பொன்ராம் அறிமுகம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.