`பீஸ்ட்’ ..


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், இயக்குநர் பேரரசு `பீஸ்ட்’ படம் குறித்த தனது கருத்துகளையும், நடிகர் விஜய்க்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளையும் முன்வைத்து பேசியுள்ளார்.


இயக்குநர் பேரரசு, `பீஸ்ட் படம் பார்த்துவிட்டு விஜய் சாருக்கு மெசேஜ் அனுப்பினேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, விஜயகாந்த், அர்ஜுன் ஆகியோருக்கு இது போன்ற களங்கள் பழக்கமானவை. ஆனால் விஜய் சாருக்கு இது புதிய களம். தீவிரவாதிகளோடு மோதுவது, திட்டமிட்டு அழிப்பது போன்றவை விஜய் ரசிகர்களுக்குப் புதிதாக இருக்கும். எப்போது விஜய் சாரைப் பொருத்த வரையில், புதிதாக ஒரு கதை வந்தால், அதில் நடிக்க ஆசைப்படுவார். திரைக்கதை என்பது அடுத்தது.. கதைக்களம் புதிதாக இருக்கிறதே என்பார். எல்லா கலைஞர்களும் அப்படித்தான்.. இதுபோன்ற கதையை நாம் நடிக்கவில்லையே என்று நினைத்து, அதை செய்வதற்கான ஆர்வத்தைக் காட்டுவார்கள். அந்த நேரத்தில் நான் பழைய பாணியிலான கதையை சொன்னால், `ஏற்கனவே பண்ணினதுதானே’  என்று சொல்லிவிடுவார்கள். அந்த வகையில், `பீஸ்ட்’ படத்தின் களம் அவருக்குப் புதிது’ என்று கூறியுள்ளார். 



நேசிப்பு, அர்ப்பணிப்பு..


தொடர்ந்து அவர், `அடுத்தது அவருடைய நடிப்பு.. ஒவ்வொரு படத்திலும் அவர் மெருகேறிக் கொண்டே இருக்கிறார். அவரது அழகும் மெருகேறுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு, நடனத்தில் சிறப்பானவராக இருந்தார்.. 25 ஆண்டுகள் கழிந்த பிறகும், அதை விட வேகமாக நடனம் ஆடுகிறார்.. அவரின் எனர்ஜி, தொழில் மீதான நேசிப்பு, அர்ப்பணிப்பு ஆகியவையே வெற்றிக்குக் காரணம்’  என்று தெரிவித்துள்ளார்.


மேலும் இயக்குநர் பேரரசு, `விஜய் சார் நிறைய கதைகள் கேட்டிருக்கிறார்.. அதில் அவருக்கு இருக்கும் அறிவு காரணமாகவே அவரது தற்போதைய படங்கள் வெற்றி பெறுகின்றன. 10 படங்களில் ஒன்று, இரண்டு மிஸ் ஆகலாம்.. ஆனால் 8 படங்கள் வெற்றிப் படங்களாக மாறுவதற்குக் காரணம், அவரின் கதைத் தேர்வு தான். நான் `திருப்பாச்சி’ கால கட்டங்களின் போது, சாதாரண உதவி இயக்குநர் தான்.. எனக்கும் அவருக்கும் எந்தப் பழக்கமும் இல்லை. நானும் அவர் படங்களில் பணியாற்றியது இல்லை. என்னை யாரும் சிபாரிசு செய்தும் அனுப்பவில்லை. தனக்கு தெரியாத பேரரசுவை அவர் தேர்ந்தெடுத்தற்குக் காரணம், நான் சொன்ன கதை.. நல்ல கதை இருந்தால் அவர் முக்கியத்துவம் கொடுப்பார். எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும், அவருக்குக் கதை பிடித்தால் மட்டுமே கால்ஷீட் கொடுப்பார்’ என்று கூறியுள்ளார்.



கிராமத்து லுக்கில்..


`எனக்கு இருக்கும் ஆசை என்பது, விஜய் சாரைக் கிராமத்து லுக்கில் பார்த்து ரொம்ப நாள்கள் ஆகிவிட்டன. அதை அவர் செய்தே ஆக வேண்டும் என்று அவருக்கு நாம் கட்டளையிட முடியாது. நான் ஒரு ரசிகனாக, அவரை `எங்க வீட்டுப் பிள்ளையாக’ அனைவரையும் போல நினைத்து, கோட் சூட் போட்டு துப்பாக்கி எடுத்து சுடும் கதாபாத்திரங்களோடு நின்றுவிடாதீர்கள்.. அதையும் பண்ணுங்கள்.. அதே நேரத்தில் வேட்டியை மடித்துக் கட்டி அரிவாளோடு இருக்கும் படங்களையும் பண்ணுங்கள்’ என்று அவர் நடிகர் விஜயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.