சிவகங்கை மாவட்டத்துல இருந்து சினிமாவுக்கு வந்தவன் நான். சினிமா மேல தீராத காதல் இருந்தது. இந்த காதல்தான் என்னை சென்னைக்கு அழைச்சிட்டு வந்தது. பாரதிராஜா, பாக்யராஜ் சார்கிட்ட உதவி இயக்குநரா சேர அலைஞ்சேன். சிலரை பார்க்குறதே பெரும்பாடா இருந்தது. அப்போதான் ராமநாரயணன் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை சேர முடிஞ்சது. கிட்டதட்ட பதினைஞ்சு வருஷம் சினிமால இருந்துட்டுதான் என்னோட முதல் படத்தை இயக்குனேன். 



விஜய் படத்தை இயக்க போறேன்னு சொல்லிட்டு இருந்தீங்களே?


'' யாராவது ஒரு இயக்குநர் கிடைச்ச போதுனு நினைச்சப்போதான் விஜய் படத்தை இயக்க வாய்ப்பு கிடைச்சது. எதிர்பாராத நேரத்துலயே விஜய் படத்தை இயக்க வாய்ப்பு கிடைச்சது. இப்போ எதிர்பார்த்துட்டு இருக்குறப்போ கண்டிப்பா படம் டைரக்‌ஷன் பண்ணுவேன்னு நம்புறேன். வருஷம் வருஷம் என்னோட பொண்ணு பிறந்தநாளைக்கு விஜய் சார் மீட் பண்ணுவேன். இப்போ, விஜய் சார் வெச்சு படம் பண்ற எல்லாரையும் கவனிச்சிட்டு இருக்கேன். நான் டைரக்‌ஷன் பண்றப்போ இதைவிட நல்ல ஸ்க்ரிப்ட்தான் பண்ணுவேன். இப்போ வர்ற இயக்குநர்கள் இன்னும் தங்களுடைய பெயரை திரையில பதிவு செய்யணும்னு நினைக்குறேன். ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்ராஜ் டைரக்‌ஷன்லாம் பிடிச்சிருக்கு. ''



விஜய் வரிவிலக்கு கேட்டது பற்றி?


நீதிமன்றதுக்கு முன்னாடி எல்லாரும் ஒன்னுதான். இந்த வகையில நீதிபதி சொன்னதுல எந்த தப்பும் இல்ல. அதே நேரத்துல விஜய் வரிவிலக்கு கேட்டதும் தப்பில்ல. ஜி.எஸ்.டி வரி வந்தப்போ எல்லாரும் இதை எதிர்க்க தானே செஞ்சாங்க. இரண்டு கோடிக்கு ஒரு பொருள் வாங்குறப்போ இதுக்கு மேல ரெண்டு கோடி வரி விதிக்குறப்போ எந்த மனுஷனுக்கும் கேட்கதானே தோணும். 


 


நடிக்குறதுக்கு வாய்ப்புகள் வந்திருக்கா?


'' இடையில நடிக்குறதுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. வருமானதுகாக இதை செலக்ட் பண்ணியிருக்கலாம். ஆனா, இயக்குநர் பேரரசுவாகவே இருக்க விரும்புறேன். தவிர, முரளி மற்றும் ராமராஜன் இடத்தை பேரரசுனாலதான் நிரப்ப முடியும்னு சொன்னாங்க. நான் மறுத்துட்டேன். ''


யுவன் இசையில 'அம்மாடி ஆத்தாடி' பாட்டு எழுதுனது?


அஜித் சாரோட 'திருப்பதி' ஷூட்டிங் நடந்திருந்தப்போ சிம்புகிட்ட இருந்து போன் வந்தது. 'சார், ஒரு பாட்டு எழுதணும்'னார். கொஞ்சம் நேரம் இல்லாம ஓடிக்கிட்டு இருந்தேன். 'வேண்டாம்னு' சொல்லலாம்னு இருந்தேன். அப்போ சிம்பு, 'நீங்க எழுதுற பாட்டை அப்பாதான் பாட போறார்னு'னார். டி.ஆர் மாதிரி சினிமாவுல வரணும்னு ஆசைப்பட்டவன் நான். இவரோட 'மைதிலி என்னை காதலி' 'உயிருள்ளவரை உஷா' படமெல்லாம் பாட்டு மெய் சிலிர்த்து இருக்கேன். உடனே, 'பாட்டு எழுதி தரேன்னு'னு சொல்லிட்டு எழுதி முடிச்சிட்டேன். ரெக்கார்ட்டிங் போது டி.ஆர் சார் பாடுறதை பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, படத்தோட ஷுட்டிங் இருந்தனால ரெக்கார்ட்டிங்ல இருக்க முடியல. பாட்டு ரிலீஸூக்கு பிறகு பெரிய ஹிட்டானது. பலருக்கும் இதைப் பாட்டு நான் எழுதுனது பற்றி தெரியாது. அஜித் சார் இதை கேள்விபட்டு, 'ஓ, இதெல்லாம் பண்ணுவீங்களானு' சிரிச்சார்.