ஆனந்த் அம்பானி திருமணத்தில் ரஜினிகாந்த்
முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் கோலாகமலாக நடைபெற்றது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்த திருமண நிகழ்ச்சிக்கும் மட்டும் மொத்தம் 5000 கோடிகள் செலவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தமிழ் திரைத்துரையைப் பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , சூர்யா ஜோதிகா , அட்லீ பிரியா தம்பதிகள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டார்கள். நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ரஜினி நடனமாடியது தொடர்பாக சமூக வலைதளத்தில் பலர் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்து வந்தனர். இப்படியான நிலையில் இயக்குநர் பேரரசு ரஜினி மீதான விமர்சனங்கள் குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் உங்கள் அடிமையா
” சூப்பர்ஸ்டார் என்றாலும் அவரும் ஒரு சாதாரண மனிதர் தானே. எங்காவது ஒரு நிகழ்ச்சியில் தானும் ஒரு சராசரி மனிதனாக கலந்துகொள்ள வேண்டும் என்று அவருக்கும் ஒரு ஆதங்கம் இருக்கலாம். அம்பானி திருமணத்தில் எல்லாரும் நடனமாடும் போது தானும் ஆட வேண்டும் என்று அவர் ஆசைப் பட்டிருக்கலாம். உடனே இதை தேசகுற்றம் போல் ரஜினி எப்படி நடனமாடலாம் என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் நடனமாடுங்கள். ஒரு நடிகன் எப்போதும் தனது உணர்ச்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு கையில் முத்திரை வைத்துக் கொண்டு மட்டும் தான் இருக்க வேண்டுமா. சூப்பர்ஸ்டார் என்றால் அவர் உங்களுக்கு அடிமையா. சில இடங்களில் அவரையும் ஒரு சராசரி மனிதனாக இருக்க விடுங்கள் இந்த விமர்சனங்களை எல்லாம் பார்க்கும்போது ரஜினி கூனி குறுகுவார். நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கின்றது அதை எல்லாம் விட்டுவிட்டு இதை பேசிக் கொண்டிருக்காதீர்கள்” என்று பேரரசு தெரிவித்துள்ளார் .
கூலி
வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் சத்யராஜ் , ஸ்ருதி ஹாசன் , செளபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். கிரீஷ் கங்காதரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.