பா ரஞ்சித்


வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக பணியாற்றி அட்டக்கத்தி படத்தில் இயக்குநராக அறிமுகமானார் பா.ரஞ்சித். தமிழ் சினிமாவில் சாதி குறித்த உரையாடலை வெகுஜன சினிமவில் தைரியமாக பேசியவர். மெட்ராஸ், கபாலி , காலா, சார்பட்டா, நட்சத்திரம் நகர்கிறது என தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒரு விவாதத்தை முன்னெடுத்துள்ளார். அரசியல் பேசும் படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றிபெற முடியும் என்பதை ரஞ்சித் நிரூபித்துக் காட்டியபின் மற்ற இயக்குநர்களும் தங்களது படங்களில் சாதி குறித்தான விவாதங்களை உள்ளடக்கினார்கள். இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக, பதிப்பாளராக பல்வேறு கலாச்சார நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது அவரது நீலம் பண்பாட்டு இயக்கம். தற்போது ரஞ்சித் தங்கலான் படத்தை இயக்கி முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆர்யா நடிக்க இருக்கும் சார்பட்டா 2ஆம் பாகத்தை அவர் இயக்க இருக்கிறார். இப்படியான நிலையில் பாலிவுட்டில் படம் ஒன்றை இயக்க இருக்கிறார் ரஞ்சித்.


பிர்ஸா முண்டா வாழ்க்கை வரலாறு






பழங்குடி இனத்தின் போராட்டத் தலைவரான பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை ரஞ்சித் படமாக்க இருப்பதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்தது. தற்போது இந்தப் படத்திற்கான வேலைகள் இந்த ஆண்டுக்குள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. நமாஹ் பிக்ச்சர்ஸ் சார்பாக ஷரீன் மந்த்ரி மற்றும் கிஷோர் அரோரா இந்தப் படத்தை தயாரிக்க உள்ளார்கள். இந்தப் படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகின. தற்போது இது தொடர்பாக ரஞ்சித் விளக்கமளித்துள்ளார். இந்தப் படத்தின் யார் நாயகனாக நடிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ரஞ்சித் கூறியுள்ளார்,


தங்கலான்


விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்து ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் தங்கலான். ஸ்டுடியோ கிரீன் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலில் வாழ்ந்த பழங்குடி இனத்தின் போராட்டக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.