திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சார்பட்டா பரம்பரை திரைப்படம், ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் நேற்று வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில், இன்று படம் வெளியானது முதல் #SarpattaParambarai ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாக ஆரம்பித்துள்ளது. நேற்று இரவே படம் ஓடிடியில் வெளியானதை அடுத்து பலரும் படம் குறித்து பேசத்தொடங்கினர். இந்நிலையில்  படத்திற்கு சமூக வலைதளங்கள் குட் என்ற பச்சை சிக்னல் காட்டியுள்ளன. படம் குறித்து பதிவிட்டுள்ள பலரும் மீண்டும் மெட்ராஸ் ரஞ்சித்தை பார்ப்பது மகிழ்ச்சி என குறிப்பிட்டு வருகின்றனர். 




இந்த நிலையில் சார்பட்டா குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தி நியூஸ் மினிட் இணையதளத்துக்கு பேசியுள்ளார். அதில், சார்பட்டா ஒரு கனவுப்படம். அட்டக்கத்தி திரைப்படத்திற்கு பிறகு இயக்க நினைத்த ஒரு திரைப்படம். சார்பட்டா பரம்பரையின் கலாசாரத்தையும், அவர்களது மரியாதையையும் காண்பிக்க முயற்சித்தேன். 1970 களில் மிகவும் இக்கட்டான காலக்கட்டம். எமெர்ஜென்சி காலமான அப்போது ஆர் எஸ் எஸ் மற்றும் கருணாநிதி தலைமையிலான திமுக கட்சிகள் எமெர்ஜென்சியை எதிர்த்தன. கம்யூனிஸ்ட் கட்சி எமெர்ஜென்சியை ஆதரித்தது. நாங்கள் அந்த அரசியல் நகர்வுகளை சரியாக கையாள நினைத்தோம். படத்தில் எமெர்ஜென்சியை மூலதனமாக வைக்கவில்லை என்றாலும் அது அரசியல் பின்னணியாக இருக்கும். குத்துச்சண்டை வீரர் முகமது அலி வெறும் குத்துச்சண்டை வீரர் அல்ல. அவர் ஒரு அடையாளம். அந்தக் காலக்கட்டத்தில் தலித் கலாசார அடையாளமாக அவர் இருந்தார். அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. தன் அடையாளத்தை வைத்துக்கொண்டு இனவெறி, நிறவெறி, வெள்ளை மேலாக்கத்திற்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை காட்டினார். தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கும் அவர் ஒரு உத்வேகமாகவே இருந்தார். அவரது நிறம், போராடும் குணம், அவரது உடல்வாகு என அவரை தங்களோடு பொருத்திப்பார்க்க தொழிலாளர் வர்க்கங்களால் முடிந்தது. வட சென்னையின் தலித் கலாச்சாரத்தின் பொதுவான நிலையை திரைப்படங்கள் மூலம் உடைக்க நினைக்கிறோம். என்றார்




ஓடிடி வெளியீடு குறித்து பேசிய ரஞ்சித்,  திரைப்பட இயக்குநர்களுக்கு முற்போக்கான சினிமாவை உருவாக்கும் சுதந்திரத்தை டிஜிட்டல் பிளாட்பார்ம்கள் கொடுக்கின்றன என நினைக்கிறேன். அரசியல் பேசும், விவாதத்தை தூண்டும் கதையை திரையில் கொண்டுவர இந்த மேடையை இயக்குநர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.


பிர்சா முண்டா என்ற  சுதந்திர போராட்ட வீரரின் கதையை கையில் வைத்திருக்கும் ரஞ்சித் அது குறித்தும் பேசினார். ஆகஸ்டில் கதை தொடர்பான வேலை முடிந்து நடிகர்கள் தேர்வு குறித்து யோசிக்க வேண்டும் என தெரிவித்த ரஞ்சித், எனது சினிமா மூலம் ஒரு விவாதத்தைத் திறக்க விரும்புகிறேன். சினிமா சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். எனது சினிமா மூலம் அரசியல் மற்றும் பிற விஷயங்களைப் பற்றி பேசும்போது ஒரு தாக்கத்தை உருவாக்க சமூக நீதி மற்றும் டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் எனக்கு உதவியுள்ளன என்று நான் நம்புகிறேன் என்றார்.




இதற்கிடையே பல அடுக்கு காதல் கதை ஒன்றை ரஞ்சித் எழுதி உள்ளதாகவும் , அதற்கு “நட்சத்திரம் நகர்கிறது’’ என பெயர் வைத்துள்ளதாகவும் ஒரு நேர்காணலில் ரஞ்சித் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிர்சா முண்டா தொடர்பான திரைப்படத்துக்கு முன்பாக 'நட்சத்திரம் நகர்கிறது' தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி: The News Minute