சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அம்பேத்கரின் கனவை நிறைவேற்றும் சீடனாக என்றும் இருப்பேன் என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒவ்வொரு ஆண்டு மார்கழி மாதம், ‘மார்கழியில் மக்களிசை’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மார்கழி மாதம் கர்நாடக சங்கீதம் தான் என்ற நிலை மாறி அனைத்து விதமான இசைகளும் இசைக்கப்படும் நிகழ்ச்சியாக இது உள்ளது. இந்த மேடை கவனிக்கப்படாத பல கலைஞர்களுக்கும் மேடையாக உள்ளது. இந்த 2025ம் ஆண்டுக்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் தொடங்கியது. டிசம்பர் 28ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், “கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த ஆதரவு ரொம்ப ரொம்ப முக்கியமானது. அதேபோல் இந்த வருடமும் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. குறுகிய காலத்தில் நம்முடைய அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் வெற்றிமாறன் என்னுடைய வளர்ச்சியிலும், தனிப்பட்ட முறையிலும் மிகப்பெரிய அக்கறைக் கொண்டவர். அதேபோல் கனிமொழி எம்.பி.,யை அவர் கவிதை எழுதும் காலத்தில் இருந்தே நல்ல பழக்கம் உள்ளது.
சென்னை சங்கமம் நிகழ்ச்சி தான் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நடத்த எனக்கு மிகப்பெரிய தூண்டுதலாக அமைந்தது. சமீபத்தில் எனக்கு மிகப்பெரிய அளவில் நெருங்கிய நண்பராக ஜி.வி.பிரகாஷ்குமார் மாறியுள்ளார். அவரின் அன்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்.
அதேபோல மாநகரம் திரைப்படம் ஆரம்பிக்கும்போது என்னுடன் பேசிய லோகேஷ் கனகராஜ், இப்போது அதே அளவு அன்புடன், என்னை கவனித்துக் கொண்டே, எப்போது துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் நிறைய பேர் நமக்காக ஆதரவுக்கரம் நீட்டுகிறார்கள்.இது சாதாரண விஷயம் அல்ல. ஏதோ ஒரு அளவு நேர்மையாக இருப்பதால் தான் இந்த ஆதரவு கிடைப்பதாக நினைக்கிறேன். நிச்சயம் அது தொடரும். அதற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
எந்த நோக்கத்திற்காக மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை தொடங்கினோமோ அது விரைவில் நனவாகும். இங்கிருக்கும் நலிவடைந்த கலைஞர்கள், கவனிக்கப்படாதவர்கள்,இன்டிபென்டெண்ட் கலைஞர்கள் ஆகியோருக்கு இந்நிகழ்ச்சி ஏதோ ஒரு வகையில் ஊக்கமாக இருக்கும். கலை மக்களுக்கானது. அதை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை நீலம் பண்பாட்டு மையம் தொடர்ந்து செய்யும். பாபா சாகேப் அம்பேத்கர் வழியில் நின்று செய்யும். அவர் அரசியல் மாற்றம், சமூக மாற்றம் ஆகிய இரண்டு விஷயங்களை குறிப்பிட்டு சொன்னார். இதில் சமூக மாற்றம் பண்பாட்டின் மூலம் கொண்டு வர முடியும் என அவர் தீவிரமாக நம்பினார். அப்படியாக அம்பேத்கரின் கனவை நனவாக்கும் சீடனாக நான் என்றைக்கும் இருப்பேன்" என தெரிவித்துள்ளார்.