சேரி மக்களைப் பற்றி சமூகத்தில் இருக்கும் தவறான பார்வைகளை களைவது மிக முக்கியமானது என்று இயக்குநர் பா ரஞ்சித் கூறியுள்ளார்


அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய கண்காட்சி


தமிழ்நாடு அரசுத் தலைமையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் புகைப்படம் கண்காட்சி ஒன்று ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. 11 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. பிப்ரவரி 16 மற்றும் பிப்ரவரி 17 ஆகிய இரு தினங்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா ரஞ்சித் , ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பேசிய இயக்குநர் ரஞ்சித் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.


ஒரு தாழ்வுமனப்பாண்மை இருக்கும்


”அரசு பள்ளிக்கூடம் அரசு கல்லூரியில் இருந்து வந்தவன் தான் நான். அரசு பள்ளியில் படிப்பது நம் ஊருக்குள் நமக்கு கொஞ்சம் கெத்தாக தான் இருக்கும் . ஆனால் அதில் இருந்து வெளியே வந்ததும் நமக்கு ஒரு சின்ன தாழ்வு மனப்பாண்மை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஏனென்றால் நமக்கு சொல்லிக்கொடுக்கப் படும் கல்வி போதுமானதாக இருக்கிறதா என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது. என்னுடைய கல்விக்கூடம் தான் எனக்கு பாசிட்டிவான ஒரு சூழலை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. நான் படித்ததை விட வரைந்தது தான் அதிகம். எல்லா நேரமும் நான் வரைந்துகொண்டே இருப்பேன். நான் 12 ஆம் வகுப்பு படிக்கும்போது ஆங்கிலத்தில் ஃபெயில் ஆகிவிட்டேன். எனக்கு இருந்த ஆசிரியர்கள் என்னை பயங்கரமாக ஊக்கப்படுத்துவார்கள். அவர்கள் எல்லாம் இல்லையென்றால் இந்த இடத்திற்கு நான் வந்திருக்க மாட்டேன். அரசு பள்ளியிலும் அரசு கல்லூரியிலும் படித்தது தான் நான் என் வாழ்க்கையில் என்னவாக ஆகவேண்டு என்கிற தெளிவு வந்திருக்கிறது என்று நம்புகிறேன்.” என்று ரஞ்சித் பேசினார்


 நான் சேரியில் இருந்து தான் வருகிறேன்


 தொடர்ந்து பேசிய ரஞ்சித் ”சேரிகளில் வாழும் மக்கள் மற்றும் தலித் மக்களைப் பற்றி இங்கு நிறைய தவறான பார்வைகளை சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. சேரியில் வாழும் மக்கள் என்றால் ரவுடி, ரொம்ப டார்க் நிறைந்த ஒரு இடமாக பொதுபுத்தியில் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த பொதுபுத்தியை உடைப்பதற்கே இங்கு பெரிய போராட்டம் நடத்த வேண்டியதாக இருக்கிறது. மெட்ராஸ் படத்திற்கு ஏ+ சான்றிதழ் தருகிறோம் என்று சென்சார் வாரியத்தில் கூறினார்கள். இது சேரிகளில் வாழும் மக்களை மையப்படுத்தி உருவாக்கப் பட்ட படம் என்பதால் இதற்காக ஒரு தனிப் பிரிவை உருவாக்குகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள். இது ரவுடிகளைப் பற்றிய படம் , ரவுடிகளுக்கான படம் என்று முத்திரை குத்தினார்கள். அவர்களுடன் கடுமையாக போராடி நான் இந்தப் படத்தை வெளியிட்டேன். இந்திய சினிமாவில் மெட்ராஸ் மிக முக்கியமான உரையாடலை தொடங்கி வைத்தது. சேரியில் வசிக்கும் மக்கள் இப்படிதான் இருப்பார்கள்  இப்படிதான் யோசிப்பார்கள் என்று ஏற்கனவே எத்தனையோ எண்ணங்கள் பொதுபுத்தியில்  பதிய வைக்கப் பட்டிருக்கின்றன. இந்த பொதுபுத்தியை உடைத்து ஒரு உரையாடலைத் தொடங்குவது என்பது மிக சிரமமானதாக இருக்கிறது. ஆனால் இன்று அந்த நிலை ஓரளவிற்கு எளிமையாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தை பரவலான ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ” என்றார்.