தங்கலான் வெற்றிவிழா


பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக தங்கலான் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று சென்னையில் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ரஞ்சித் , நடிகர் விக்ரம் மற்றும் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். 


நீங்கள் இருக்கும்போது எனக்கு என்ன பயம்?


நிகழ்ச்சியில் பேசியை இயக்குநர் ரஞ்சித் ”ஒரு திரைப்படத்தை ஏன் எடுக்கிறோம் என்கிற கேள்வியோடு தான் நான் சினிமாவிற்கு வந்தேன்.அதனடிப்படையில் என்னுடைய  என்னுடைய திரைப்பட வாழ்க்கை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தங்கலான் திரைப்படம் தமிழ் சமூகத்தில் ரொம்ப முக்கியமான வாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனபதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.


ஏற்கனவே பழக்கப்பட்ட ஒரு மொழியில் படம் பண்ணுவது எவ்வளவு முக்கியமான விஷயமோ அதேபோல் பழக்கப்படாத ஒரு மொழியில் அதுவும் என்னுடைய அகத்தை வெளிப்படுத்தும் வேட்கைதான் தங்கலான். அதை நிறைய மக்கள் , ரசிகர்கள் இந்த படத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த படம் பற்றி மக்கள் சமூக வலைதளங்களில் விவாதிப்பதை பார்க்கும்போது நம்ம ஒரு சரியான படத்தை எடுத்திருக்கிறோம் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.


இந்த வெற்றியில் என்னுடன் சேர்ந்து நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். பயங்கராமாக உழைப்பதால் மட்டும் ஒரு படத்தை கொண்டாட வேண்டுமா? என்பது இல்லை. நாம் சாதாரணமான படமாகவும் எடுக்கலாம் சுமாரான படமாகவும் எடுக்கலாம். ஆனால் என்னுடைய உழைப்புதான் என்னை இந்த மாதிரியான இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. என்னைவிட பலமடங்கு இந்த படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்காக வேலை செய்திருக்கிறார்கள். பணத்திற்காக மட்டுமில்ல என்மேல் கொண்ட அன்பினால் தான் அவர்கள் இந்த வேலைகளை செய்தார்கள். இது எனக்கு ஒரு பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறது. 


சில நேரங்களில் நம் மேல் வன்மம் வரத்தான் செய்யும். ஆனால் அதைவிட உங்களது அன்பு இருக்கிறது. அந்த அன்பு இருக்கும்போது எனக்கு என்ன பயம். ஆந்திரா , மகாராஷ்டிரா , டெல்லி போன்ற மாநிலங்களில் படமே பார்க்காதவர்கள் கூட தூக்கி வச்சு கொண்டாடுகிறார்கள். அந்த மக்கள் இருக்கும்போது நான் எந்த கவலையும் பட தேவையில்லை என்பதைத்தான் தங்கலான் படம் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது” என்று பேசினார்.