நம்முடைய சிரிப்பு எவ்வளவு வலிமை மிக்கது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். 


புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி, சமத்துவம தொடர்பான உறுதிமொழிகளையும் எடுத்துக் கொண்டனர். இதனிடையே அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரலை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் வகையில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வானம் கலைத்திருவிழாவை கொண்டாடி வருகிறது. கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில் கடந்த இரு தினங்களாக  தம்மா நாடக விழா நடைபெற்றது.


இதன் நிறைவு விழாவில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “நம்ம எதை தடையாக நினைக்கிறோமோ உள்ளிட்ட நிறைய கேள்விகளுக்கு பதில் தேடக்கூடிய காலமாக உள்ளது. சும்மா சிரிச்சதுக்கே பல பல அர்த்தங்களை சொல்லும்போது, நம்முடைய சிரிப்பு எவ்வளவு வலிமை மிக்கது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய இடமாக உள்ளது. அதனால் தான் நாம் ரொம்ப முக்கியமான காலக்கட்டத்தில் இருப்பதாக நம்புகிறேன். இந்த காலக்கட்டத்தில், நேரத்தில் நாம் விழிப்புணர்வு அடையவில்லை என்றால் எப்பவுமே அடைய முடியாது.


அப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த  இந்த ஏப்ரல் மாதத்தை வரலாற்று மாதமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதன் அடிப்படையை நாம் சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும். இதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம், மக்களுக்கு என்ன கொடுக்கப்போகிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சமூகம் என்ன மாதிரியான சிக்கலில் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு வேலை செய்ய வேண்டும். ஒரு சமூகமாக, குழுவாக இணைந்து வேலை செய்துக் கொண்டிருக்கிறோம். வெற்றி என்பது மக்கள் கூடுதலில் இல்லாமல் இந்த சிந்தனையை மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கு சிறிது நேரம் செலவிடுவதில் தான் இருக்கிறது” என தெரிவித்தார். 


பா.ரஞ்சித் திரைப்பயணம்


அட்டக்கத்தி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்சித், மெட்ராஸ், கபாலி, காலா, சார்ப்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என அடுத்தடுத்து சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படங்களை எடுத்துள்ளார். தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகிறார். அடுத்ததாக பா.ரஞ்சித் நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் நாளை மறுநாள் விக்ரம் பிறந்தநாளுக்கு ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.