மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் காளமாடன் திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பா ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. பைசன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று அக்டோபர் 12 சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பா ரஞ்சித் தங்கலான் படத்திற்காக விக்ரமுக்கு அங்கீகாரம் கிடைக்காதது குறித்து பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது 

Continues below advertisement

விக்ரம் பற்றி பா ரஞ்சித்

" இந்த இடத்தில் விக்ரமை பற்றி நான் கொஞ்சம் பேச வேண்டும். என்னுடைய திரைப்படங்களில் நடித்த நிறைய நடிகர்களை பார்த்து நான் மிரண்டு போயிருக்கிறேன். நடிப்பை தொழிலாக மட்டுமில்லாமல் ரசித்து நடிப்பவர்களுடன் பணியாற்றுவது எனக்கு பிடிக்கும். அதில் நான் ரொம்ப வியந்து பார்த்த நடிகர்கள் இரண்டு பேர். ஒருவர் பசுபதி சார். இன்னொருவர் சியான் விக்ரம். தங்கலான் எனக்கு ஆறாவது படம். ஆனால் தங்கலான் அவருக்கு எத்தனையாவது படம் என்று எனக்கு தெரியல. இவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டும் என்று உங்களை தூண்டுவது எது என்று அவரிடம் கேட்டேன். அவர் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொன்னார் . ஆனால் தங்கலான் படத்திற்கு இந்த சமூகம் அவருக்கு தரவேண்டிய மரியாதையை தந்ததா என்றால் இல்லை. ஒரு நடிகனாக அவருக்கான அங்கீகாரத்தை தரவில்லை. ஒரு இயக்குநராக அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நான் தவறு செய்திருக்கலாம். ஆனால் தங்கலான் கதாபாத்திரத்தை விக்ரம் ஏற்று நடித்த அந்த உடல் மொழி மிக அபாரமானது. அதை பார்த்து மக்கள் ரசித்து கொண்டாடியிருக்கிறார்கள். ஆனால் அதை ஏற்றுக் கொண்டு அதை பரிசீலிப்பதற்கு இங்கு நிறைய மனத்தடை இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அது அவரை பயங்கரமாக காயப்படுத்தி இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் தான் ஒவ்வொரு முறையும் அவர் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தன்னுடைய உடலையே ஒரு போராட்ட கருவியாக அவர் மாற்றியிருக்கிறார். " என விக்ரம் குறித்து பா ரஞ்சித் பேசினார்.

"விக்ரம் சிறப்பாக நடிப்பார் என்பதால் அவரது மகனும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. திறமை என்பது பிறப்பால் வரக்கூடியது என்று நான் நம்பவில்லை. துருவ் உங்கள் அப்பாவின் வாழ்க்கையில் இருந்து நீங்கள் நிறைய கற்றுக் கொள்வீற்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு சிறப்பாக எதிர்காலம் இருக்கிறது." என துருவ் விக்ரம் குறித்து பேசுகையில் பா ரஞ்சித் கூறினார். 

Continues below advertisement