தவெக அரசுக்கு தொடர்ச்சியாக தனது ஆதரவை தெரிவித்து வருபவர் திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித். சமீபத்தில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா ரஞ்சித் தமிழக அரசியல் சூழலையும் திரைப்பட சூழலையும் ஓப்பிட்டு பேசியுள்ளது தவெக ஆதரவாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஞ்சித் பேச்சை தவெக ஆதரவாளர்கள் பரவலாக ஆதரித்து வருகிறார்கள். 

Continues below advertisement

எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் 'டார்க்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 'டாடா' புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் ரஞ்சித் படம் குறித்தும் அண்மை கால தமிழ் திரைப்பட சூழல் குறித்தும் பேசினார். 

Continues below advertisement

இயக்குநர் ரஞ்சித் பேசியபோது " நம்முடன் இருப்பவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது நல்ல விஷயம்தான். ஆனால் இதில் ரிஸ்க் அதிகம். இது சாதாரண விஷயமும் அல்ல. படத்தை தயாரிப்பது என்பது எளிதானது அல்ல. கதையை நம்பி முதலீடு செய்து அந்த பணம் திரும்ப வருமா... வராதா... என்ற தவிப்பு ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் இருக்கும். தயாரிப்பாளர் என்பதால் அது எனக்கும் தெரியும். 

ஃபைவ் ஸ்டார் செந்தில் போன்றவர்கள் படங்களை தயாரித்து வெற்றி பெற வேண்டியது முக்கியம் என நான் நினைக்கிறேன். அதிலும் சின்ன பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வெற்றி பெறுவது ரொம்ப அவசியம் என்று நினைக்கிறேன். எப்படி தமிழக சூழலில் அரசியலில் மாற்றம் வந்ததோ அதேபோல் தமிழ் திரை உலகத்திலும் சின்ன படங்கள் வெளியாகி, தியேட்டர்களை நோக்கி மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. 'பிளாஸ்ட்', 'சிறை' போன்ற படங்கள் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூல் செய்திருக்கிறது. பெரிய பட்ஜெட் படமான 'கருப்பு' திரைப்படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அண்மையில் வெளியான 'ஹபீபி' திரைப்படத்திற்கு கூட ஏராளமானவர்கள் வருகை தந்து பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகி இருந்தது. 

தியேட்டரை நான் ஜனநாயகம் மிக்க இடமாக பார்க்கிறேன். மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் நல்ல படங்களை உருவாக்கினால்.. நிச்சயமாக நல்ல லாபத்துடன் கூடிய வெற்றி கிடைக்கும். அந்த வகையில் டார்க் திரைப்படமும் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும் என்று வாழ்த்துகிறேன்,'' என்றார்.