தமிழ் சினிமா வெறும் பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கப்படக்கூடாது, அதன் மூலம் சமுதாயத்தில் நடைபெறும் பல்வேறு அவலங்களை வியாபார ரீதியில் எதிர்நோக்காமல் துணிச்சலுடன் அதை மக்களுக்கு எந்தவித தயக்கமும் இன்றி வெளிப்படையாக தோலுரித்துக் காட்டும் வெகு சில இயக்குநர்களில் மிக முக்கியமானவர் பா. ரஞ்சித் (Pa. Ranjith).   


 



பா. ரஞ்சித் போட்ட பிள்ளையார் சுழி :


இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக சென்னை 28, சரோஜா உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தாலும் தனக்கென ஒரு தனி ஸ்டைல் இருப்பதை மாறுபட்ட கதைக்களத்துடன் தனது முதல் படத்திலேயே வெளிப்படுத்தி இருந்தார். 2012ஆம் ஆண்டு வெளியான 'அட்டகத்தி' படம் மூலம் ஒட்டுமொத்த திரையுலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர். வெங்கட் பிரபு படைப்புகள்  என்றுமே கலகலப்பான, நகைச்சுவை கலந்த, கலாட்டா நிறைந்த முழு நீள என்டர்டெயின்மென்ட் படங்களாக இருக்கும். அந்தப் பட்டறையில் இருந்து வந்தவரா இவர் என அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு மெய் சிலிர்க்க வைத்தவர் பா. ரஞ்சித்.  


நல்லதொரு மாற்றம் :


ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு குரல் கொடுக்கும் வகையில் படங்களை எடுப்பது பா.ரஞ்சித்தின் தனிச்சிறப்பு. பா. ரஞ்சித்தின் 'அட்டகத்தி' திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை, காலா, நட்சத்திரம் நகர்கிறது எனத் தொடர்ச்சியாக வித்தியாசமான படைப்புகள் மூலம் ரசிகர்கள் மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினார். அவரின் படங்கள் மூலம் மக்களின் வாழ்க்கை முறையை, தேவைகளை திரைப்படம் மூலம் காட்சிப்படுத்தி நல்ல ஒரு மாற்றம் நிச்சயமாக அமையும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தார். 


 



அழுத்தமான திரைக்கதை :


பொதுவாக மக்கள் தங்களின் பொழுதுபோக்குக்காக பார்க்கும் படங்களில் ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என கலவையான காட்சிகள் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் படங்களின் மூலம் தினசரி வாழ்வாதாரத்தை, கலாச்சாரத்தை அழுத்தமான ஒரு திரைக்கதையாய் அமைத்து அதன் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்வதில் முக்கிய பங்கு வகிப்பவர் பா. ரஞ்சித். இன்னும் சொல்லப்போனால் பா.ரஞ்சித் படங்கள் மட்டும் இல்லாமல் அவரது சமூக செயல்பாடுகள் கூட ஒரு சமூக சீர்திருத்தவாதியின் குரலாகவே இங்கு ஒலித்துக்கொண்டு உள்ளது. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்


இயக்குநராக தனது இருப்பை ஆழமாகப் பதிவு செய்த பா.ரஞ்சித், தரமான திரைக்கதை கொண்ட பரியேறும் பெருமாள், ரைட்டர், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்கள் வரிசையில் அழுத்தம் திருத்தமான திரைக்கதை கொண்ட படங்களை தயாரித்தும் வருகிறார்.


தங்கலான் விரைவில் :


பா. ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியில் 'தங்கலான்' படம் மூலம் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய திரைக்கதையை பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பெரும் கவனமீர்த்தது. இப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் எந்த மாதிரியான அரசியலை புகுத்தியுள்ளார் பா. ரஞ்சித் என்பது படம் வெளியான பிறகு தான் வெளிச்சத்துக்கு வரும். 'தங்கலான்' திரைப்படம் நிச்சயம் 2024ம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.