வாழ்க்கையில் வெற்றி மற்றும் தோல்வி என்றே ஒன்றே கிடையாது. அதனை கடந்து நாம் போய்க் கொண்டிருக்க வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.


இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் அடுத்ததாக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். மிஷ்கினை வைத்து சவரக்கத்தி என்ற படத்தை இயக்கிய அவரது சகோதரர் ஜி.ஆர்.ஆதித்யா 2வதாக டெவில் என்ற படத்தை எடுத்துள்ளார். அதில் தான் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில் விதார்த்,பூர்ணா, ஆதித் அருண், சுபா ஸ்ரீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டச் ஸ்க்ரீன் மற்றும் மாருதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


இதனிடையே இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “நான் இந்த படத்தை என்னுடைய படமாக பார்க்கவில்லை.இப்படத்துக்கு இசையமைத்துள்ளேன் மற்றும் சில காட்சிகள் நடித்துள்ளேன். நான் 3வது படம் எழுதிக் கொண்டிருக்கும் போது தம்பி வந்து என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்து கொள்கிறேன் என சொன்னான். நான் கீழே கிடந்த செருப்பை எடுத்து அடித்துவிட்டேன். நிறைய பேர் உதவி இயக்குநருக்கு படித்தவர்களை எடுப்பார்கள். ஆனால் நான் எளிமை, ஏழை, அப்பா, அம்மா இல்லாத நபர்களை எடுப்பேன். அவர்கள் தான் சமூகத்துக்கு ஏதாவது நல்ல கதை  சொல்ல நினைப்பார்கள். சினிமாவை நேசிக்கும் திறன் இருக்கும். சிறு வயதில் யார் அதிகமாக பாதிக்கப்பட்டார்களோ அவர்களால் தான் மிகச்சிறந்த செயல்களை செய்ய முடியும். அதனால் ஸ்ரீகாந்தை நான் சேர்த்துக் கொள்ளவில்லை. எங்காவது போய் கஷ்டப்படு என சொன்னேன். பின்னர் பார்த்திபனிடம் வேலை செய்தார். 


சினிமா வந்து ஒரு வழிப்பாதை. பார்த்திபனிடம் வேலை பார்த்த பிறகு நான் சேர்த்துக் கொண்டேன். நான் இயக்கும் ட்ரெயின் படத்தில் கூட ஜான் விஜய் பண்ண வேண்டிய கேரக்டர். நான் ஷூட்டிங் தொடங்கிய காரணத்தினால்  ஆதித்யா நடித்தான். அவன் என்னிடம் டெவில் படத்துக்கு இசையமைக்க சொல்லி கேட்டார். நான் அப்போதுதான் இளையராஜாவிடம் இருந்து வெளியே வந்து ஒரு 6 வருடமாக இசை கற்றுக் கொண்டேன். நான் என் தம்பியிடம் சொல்வது ஒரு விஷயம் தான். வாழ்க்கையில் வெற்றி என்ற ஒன்று இல்லை, தோல்வி என்ற ஒன்றும் இல்லை. போய்க் கொண்டே இருக்க வேண்டும். சொல்லப்போனால் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சொல்ல நினைப்பது என்னவென்றால் வாழ்க்கையில் யாரும் சாதிக்கவே முடியாது” என மிஷ்கின் தெரிவித்துள்ளார்.