தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருந்து தனது தீவிரமான முயற்சியாலும் அர்ப்பணிப்பாலும் நடிகையாக உயர்ந்தவர். இவரது நடிப்பில் இறுதியாக லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்னர் வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நடிகை திரிஷா குந்தவை கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். 


இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து கடந்த வாரம் முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜூ என்பவர் மிகவும் அருவருக்கத்தக்க மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டினை ஊடகங்களில் தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக, பரவவே பல்வேறு திரைக் கலைஞர்களையும் கொதிப்படையச் செய்தது. இது தொடர்பாக நடிகர் சங்கம் கண்டனங்களைத் தெரிவித்தது. நடிகை திரிஷா சம்பந்தப்பட்ட அதிமுக நிர்வாகிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது மட்டும் இல்லாமல், அவதூறு வழக்கையும் தொடுத்துள்ளார். 


இந்நிலையில் டபுள் டக்கர் படக்குழு செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது பேசிய இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், நான் இதுவரை நடிகை திரிஷாவை இரண்டு முதல் மூன்று முறைதான் பார்த்திக்கின்றேன். திரிஷா குறித்து அவதூறு செய்தி பரவியபோது அவர் எங்களது ஸ்டூடியோவில்தான் பணியாற்றிக்கொண்டு இருந்தார். எனது உதவியாளர்கள் வந்து நடந்தை என்னிடம் கூறினர். திரிஷா மிகவும் வருத்தத்தோடு இருப்பதாக கூறினர். ஒரு நடிகையைப் பற்றி நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் சாவித்திரி, மனோரமா, கே.ஆர்.விஜயா, சரோஜா தேவி ஆகியோரைப் பார்த்து வளர்ந்திருக்கின்றோம். எனது பெற்றோர்கள் உதாரணத்திற்காக சொல்லும்போது கூட ஆடிப்பெருக்கு படத்தில் ஒரு பெண் தனது காதலை எப்படி தியாகம் செய்கின்றாள் என சொல்லி வளர்த்தார்கள். சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி போன்றோர் எனக்கு பெரிய அம்மாக்கள் போன்றவர்கள். இன்னும் சொல்லப்போனால் எனது தாயாரின் தாய்கள். 


ஒரு நடிகையைப் பற்றி மிகவும் எளிமையாக எதையும் பேசிவிடாதீர்கள். அவர்கள் அனைவரும் தொழில்முறை நடிகர்கள். நான் இரண்டு முறை திரிஷாவைப் பார்த்துள்ளேன். மிகவும் எளிமையாகவும் மேன்மையாகவும் பேசுவார்கள். நான் மிகவும் மனது வருத்தப்பட்டேன். மிகவும் பரபரப்பான செய்தி வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் ஒரு நடிகை தாய், நடிகை ஒரு பெண். ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசாதீர்கள். நான் யார் பேசினார்கள், யார் அதனை செய்தியாக்கினார்கள் என்பதைப் பற்றி நான் பேசவில்லை. இந்த விஷயத்தில் நாம் பாக்கவேண்டியது, ஒரு பெண்ணைப் பற்றி குறிப்பாக நமது வீட்டில் உள்ள ஒரு பெண்ணைப் பற்றி இப்படி பேச விடுவோமா? நம்ம வீட்டில் இருக்கும் ஒரு தங்கச்சியைப் பற்றி, நம்ம வீட்டில் உள்ள ஒரு தாயைப் பற்றி, நம்ம வீட்டில் உள்ள அக்காவைப் பற்றி, நம்ம வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசினால் நாம் அனுமதிப்போமா? தயவு செய்து இதுபோன்று செய்யாதீர்கள். மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கின்றேன்” என இயக்குநர் மிஷ்கின் பேசினார்.