கேள்வி கேட்ட பெண் ஒருவரை இயக்குநர் மிஷ்கின் அவமானப் படுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மிஷ்கின்


தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய் , பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ உள்ளிட்ட  படங்களை இயக்கியுள்ளார். சினிமாவைக் கடந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பேசுவது சர்ச்சையாவது வழக்கம். தற்போது சென்னையில் நடந்து வரும் இலக்கிய திருவிழாவில் கலந்துகொண்ட மிஷ்கின் அவரிடம் கேள்வி கேட்ட மாணவர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


சினிமாவை விட்டு போயிடலாம்னு இருக்கேன்


இலக்கியம் மற்றும் சினிமாவுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றி பேசிய மிஷ்கின் ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் நல்ல இலக்கிய நூல்களை படிக்க வேண்டிய அவசியத்தை பல்வேறு சுவாரஸ்யமான கதைகளின் வழியாக பேசினார் . இந்த நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின் இன்னும் சிறிது காலத்தில் தான் சினிமாவை விட்டு போய்விடலாம் என்று இருப்பதாக கூறினார். அடுத்த 20 வருடங்களுக்கு ஒரு ஆற்றங்கரை ஓரம் உட்கார்ந்தபடி புத்தகத்தை மட்டுமே படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக அவர் பேசினார். பேசி முடித்ததை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்வர்களில் கேள்விகளுக்கு பதிலளித்தார். கல்லூரி மாணவர்கள் அவரிடம் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு மிகவும் கடுமையான அவமானப்படுத்தும் வகையிலான பதில்களை கொடுத்துள்ளார் மிஷ்கின்.


உன்னோட டிரஸ்ஸ பாத்தாலே தெரியுது


ஏன் இலக்கியத் தன்மையுடன் சினிமாக்கள் அதிகம் வருவதில்லை என்று பெண் ஒருவர் மிஷ்கினிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு மிஷ்கின் “ இந்த கேள்வி உன்னோட கேள்வியா இல்ல உன்னோட டீச்சர் எழுதி கொடுத்தாங்களா... நீ படிச்ச ஒரு புத்தகத்தோட பேர் சொல்லு “ என்று அந்த பெண்ணிடம் கேட்க அந்த பெண் பதில் சொல்லாமல் நிற்கிறார். உடனே  “ போ அப்படியே பின்னால போ...உன்னோட டிரஸ்ஸ பாக்கும்போதே தெரியுது நீ இலக்கியம் படிக்கலனு” என்று கூறினார்.


இதனைத் தொடர்ந்து மற்றொரு மாணவர் தான் சைன்ஸ் ஃபிக்‌ஷன் , ஹ்யூமர் படங்களை எடுக்க ஆசைப்படுவதாகவும் ஆனால் அன்பே சிவம் மாதிரியான படம் எடுத்தால் அதற்கு பெரியளவில் வரவேற்பு கிடைப்பதில்லை. இளம் இயக்குநர்கள் எந்த மாதிரியான படங்களை எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மிஷ்கின் அந்த மாணவரிடம் “ அன்பே சிவம் படத்தை ஹ்யூமர் படம் என்று சொல்லாத . தெரியாமல் தத்து பித்துனு எதுவும் உளராத.முதல்ல கொஞ்சம் நல்லா சாப்டு படிச்சு கொஞ்சம் பெரிய ஆளா ஆகிட்டு வா போ” என்று அந்த மாணவருக்கு பதிலளித்தார். 


இப்படி அடுத்தடுத்த மாணவர்கள் கேள்வி கேட்க அவர்களை உதாசீனப்படுத்தும் வகையில் மிஷ்கினின் பதில் அமைந்துள்ளதாக இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இலக்கியம், சினிமா குறித்து இப்படியான வெகுஜனத்திடம் பேச சிறப்பு விருந்தினராக வரும் மிஷ்கின் எளிய மக்களின் கேள்விகளை இப்படி மட்டம் தட்டுவது விமர்சனத்திற்குரிய ஒரு செயலாக மாறியுள்ளதாக பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.