என்டர்டெயின்மெண்ட் - ENTERTAINMENT


ENTERTAINMENT என்கிற வார்த்தை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம் இல்லையா. இந்த வார்த்தையின் அர்த்தம் என்னத் தெரியுமா? இந்த வார்த்தையின் மூலம் லத்தின் மொழியில் இருந்து உருவானது


ENTER என்பதற்கு - ஒரு மக்கள் கூட்டம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் நுழைவது.  TAIN - என்பதன் பொருள் கவனத்தை ஈர்த்து வைத்தல். MENT - என்பதன் பொருள் மனிதர்களின் கவனம் . திரையரங்கத்திற்குள் நுழையும் மனிதர்களின் கவனத்தை சிதறாமல் ஈர்த்து வைத்திருப்பதே இந்த வார்த்தையின் பொருள். இந்த வார்த்தையில் அர்த்தத்தை இத்தனை ஆண்டு கால சினிமாவில் முதல் முதலாக விளக்கியவர் இயக்குநர் மிஸ்கின். 


இயக்குநர் மிஸ்கின்


ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து நீங்கள் இயக்குநர் மிஸ்கின் ரசிகர்களாக இருந்து  வருகிறீர்கள் என்றால் இன்று அவர்மேல் அதிகம் கோபம் கொண்ட ஒரு நபராக நீங்கள் இப்போது இருப்பீர்கள். இன்று  நாம் பார்க்கும் மிஸ்கின் பாரபட்சம் இல்லாமல் எல்லாப் படங்களையும் பாராட்டுகிறார். மேடைகளில் பிரபல நடிகர்களை புகழ்ந்து தள்ளுகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுகிறார். பெரும்பாலா சினிமா நிகழ்ச்சிகளில் அவரது பேச்சு கவனத்தை ஈர்க்கும் என்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே அவரை பேச அழைக்கிறார்கள். ஆனால் பாட்சா மாதிரி அவருக்கு ஃபிளாஷ் பேக் கொடுத்தோம் என்றால் (10 ஆண்டுகளுக்கு முன் பாட்சா படத்தை தன்னுடன் ஒப்பிட்டதற்கு கூட கோபப்படுபவராக இருந்திருப்பார்) அன்றைய மிஸ்கின் எப்படியானவர் என்று தெரியும்.


சினிமா ஆர்வலர்களின் நம்பிக்கை


ஒரு பக்கம் கமர்ஷியல் சினிமா எல்லா காலத்திலும் அரக்கத்தனமாக மக்களின் ரசனையை மழுங்கடித்துக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் ஒரு சில இயக்குநர்கள் வழக்கமான படங்கள் இல்லாமல் சினிமாவை தாங்களாக கற்று தங்களது படங்களால் ஒரு சிறிய ரசனை மாற்றத்தையாவது இங்கு கொண்டுவர முடியாதா என்று போராடிக் கொண்டிருந்தார்கள். ராம், மிஸ்கின் ஆகிய இயக்குநர்களை இந்த வரிசையில் குறிப்பிடலாம். இயல்பாகவே இவர்களுக்கு வெகுஜன சினிமாவின் மேல் ஒரு கோபம் இருந்தது. இவர்களின் பழைய பேட்டிகளை எடுத்து பார்த்தோமானால் அவர்களின் பேச்சில் இந்த கோபம் வெளிப்படுவதை நாம் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக மிஸ்கினின் பழைய காணொளிகள் சினிமாவை மதிக்கும் ஒருவருக்கு உரமாக இருந்திருக்கின்றன.  ஒரு முறை தன்னுடையப் படங்களில் ஏன் பாடல்கள் இல்லை என்கிற கேள்விக்கு மிஸ்கின் மிக காத்திரமாக பதில் பேசியிருப்பார். ஒரு பாடல் இல்லாமல் படம் எடுப்பதற்கு தான் 17 ஆண்டுகாலமாக போராடி வருகிறேன் என்று குறிப்பிட்டிருப்பார். 



வணிக சினிமாவின் போக்கு தன்னை மாதிரியான இயக்குநர்களை நல்லப் படங்கள் எடுப்பதை சிரமமானதாக மாற்றுகிறது என்று பழைய மேடைகளில் கொந்தளித்து பேசியிருக்கிறார் மிஸ்கின். இத்தனைப் போராட்டங்களுக்கு பிறகு தனக்கேன தனித்துவமான ஒரு சினிமாவை உருவாக்கி இருக்கிறார். அவரது படங்களின் மேலான விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு இயக்குநராக தனக்கான கதை சொல்லல் முறையை  அவர் உருவாக்க ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இன்று வெகுஜனத்தில் மிஸ்கினின் படங்கள் என்றால் அதற்கு தன்னை எப்படியான ஒரு மனநிலைக்கு தயார்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்று ரசிகர்களுக்குத் தெரியும்.


படுத்தேவிட்டாரய்யா என கலாய்க்கும் ரசிகர்கள்.


 நேற்று லியோ வெற்றிவிழாவில் இயக்குநர் மிஸ்கின் நடிகர் விஜயை புருஸ் லீ மைக்கெட்ல் ஜாக்‌ஷன் மாதிரியான மாபெரும் ஜாம்பவான்களுடம் நடிகர் விஜயை ஒப்பிட்டு பேசியுள்ளார். கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் ஒரு மனிதரிடம் நிச்சயம் சிறப்பான குணங்கள் இருக்கலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் புரூஸ் லீ , மைக்கெட்ல் ஜாக்சன் என்பவர்கள் மனித ஆற்றலின் உச்சங்களுக்கு சென்றவர்கள். சரி...ஆனால் இத்தனை ஆண்டுகளாக வெகுஜன சினிமாவை விமர்சித்து வந்த மிஸ்கின் இப்போது அதே வெகுஜன சினிமாவின் சின்னமாக நிற்கும் விஜய்யுடன் இவ்வளவு தாழ்ந்து நிற்க வேண்டிய அவசியம் என்ன? அதை மரியாதை என்று சொல்லலாமா? பணிவு என்று சொல்லலாமா? இந்த மரியாதை விஜய்க்கு கொடுத்தால் அப்போது தான் கடவுளாக மதிக்கும் ஜப்பானிய இயக்குநர் அகிரா குரசோவாவை எந்த இடத்தில் வைத்திருக்கிறார் மிஸ்கின். சினிமாவில் நடிகர்களை கடவுளாக கொண்டாடும் போக்கை எதிர்த்த ஒரு சிலரும் இப்போது அதற்குள் இணைந்துவிட்டார்கள்.


அதிருப்தி காட்டும் ரசிகர்கள்


மிஸ்கினின் இந்த செயல்கள் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் பல சினிமா ரசிகர்களுக்கு இது அவ்வளவு மனநிறைவான தருணமாக இல்லை என்பதே உண்மை. சமூக வலைதளங்களில் மிஸ்கினின் மேல் தங்களது அதிருப்தியை காட்டத் தொடங்கி இருக்கிறார்கள் ரசிகர்கள்.