டிராகன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் டிராகன்.கே. எஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். லவ் டுடே படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதன் படங்களுக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் டிராகன் படம் வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. டிராகன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மிஸ்கின் கலந்துகொண்டார். சமீபத்தில் பாட்டில் ராதா படத்தின் பிரஸ் மீட்டில் மிஸ்கின் ஆபாச வார்த்தைகளை பயண்படுத்தி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மிஸ்கினை கண்டித்து திரைத்துறையில்  சிலரும் ரசிகர்களும் பேசியிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து மிஸ்கின் பத்திரிகையாளர்கள் முன் பகிரங்க மன்னிப்புக் கேட்டார். சமுத்திரகனி உள்ளிட்ட பலர் மிஸ்கினுக்கு ஆதரவாகவும் பேசியிருந்தார்கள். டிராகன் பட நிகழ்ச்சியில் கூடிய விரைவில் தான் சினிமாவை விட்டு போகப் போவதாக மிஸ்கின் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சினிமாவை விட்டு போகப் போகிறேன்

" நான் இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஒரு வருடம் ஓய்வு எடுக்கலாம் என்றுதான் நினைத்தேன்.  இரண்டே நபர்களுக்காக மட்டும்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். ஒன்று அகோரம் சாருக்காக. அவருடன் நான் ஒரு படம் பண்ணியிருக்கேன். அவர் எப்போதும் தயாரிப்பாளர் மாதிரி நடந்துகொள்ள வில்லை. ஒரு தந்தையைப் போல் தான் நடந்து கொண்டார். அவருடைய இரு மகள்களும் இந்த சின்ன வயதில் வேலை செய்வதை பார்க்க பெருமையாக இருக்கிறது. 
ரொம்ப கம்மியான நல்லவர்கள் இருக்கிற சினிமாவில் , கெட்டவங்க நிறைய இருக்கிற சினிமாவில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிற ஒரு ஆள் நான். சீக்கிரமே இந்த சினிமாவை விட்டு போகப் போகிறவன் நான்" என இயக்குநர் மிஸ்கின் தெரிவித்துள்ளார்.